மாவட்ட மேலாளர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் குறைதீர் கூட்டம்..பொதுமக்கள், பணியாளர்கள் பங்கேற்கலாம்

சென்னை: டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நாளை மாவட்ட மேலாளர்கள் அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள டாஸ்மாக்  கடைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அதிக அளவில் புகார்கள் வருகிறது. இதுகுறித்து மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்படும் போது அதற்கு சரியான பதில் இல்லை என குற்றம்சாட்டப்பட்டது.

எனவே, தலைமை அலுவலகத்திற்கு வரும் புகார்களை சீர்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4வது செவ்வாய் கிழமைகளில் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்த நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து  மாவட்ட மேலாளர் அலுவகங்களிலும் நாளை காலை 9.30 மணி முதல் 11 மணி வரையில் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் மதுக்கூட உரிமைதாரர்கள் பங்கேற்கலாம். இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் ஆகிறது என்பது குறித்த  விளக்கத்தை மாவட்ட மேலாளர்கள் அனுப்புவார்கள். ஏற்கனவே, டாஸ்மாக் அலுவலகத்திற்கு மனு அளித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலும் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் மனு அளிக்கலாம். இப்பணியை முதுநிலை  மண்டல மேலாளர்கள் கண்காணிப்பார்கள்.  இவ்வாறு கூறினார்.

Related Stories: