தகிக்க வைக்கும் தங்கம்

தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதலே அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்கும் நடுத்தர மக்களை நிலைகுலைய செய்து வருகிறது. ஆகஸ்ட் 1ல் ரூ.26,480 ஆக இருந்த தங்கம், 2ம் தேதி ரூ.27,064 ஆக உயர்ந்தது. 3ம் தேதி ரூ.27,328, 5ம் தேதி ரூ.27,680, 6ம் தேதி ரூ.27,784 என உயர்ந்தது. தொடர்ந்து 7ம் தேதி ரூ.28,376, 8ம் ேததி 28,464, 9ம் ேததி ரூ.28,552, 10ம் தேதி ரூ.28,656, 12ம் தேதி ரூ.28,824, 13ம் தேதி ரூ.29,016 என 13 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,536 அளவுக்கு தங்கம் விலை எகிறியுள்ளது.

கடந்த 14ம் தேதி திடீரென தங்கம் விலை குறைந்து சவரன் ரூ.28,624 ஆக விற்பனையானது. மறுநாள் மீண்டும் உயர்ந்து, ரூ.28,944க்கு விற்பனையானது. இதுபோல் ஒருநாள் அதிகரிப்பது ஒரு நாள் குறைவது என இருந்த தங்கம் விலை, கடந்த  24ம் தேதி ஒரு சவரன் ரூ.29,440க்கு விற்பனையானது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தைக்கு விடுமுறை. இதனால் ரூ.29,440க்கே நேற்றும் விற்பனையானது. கடந்த 13ம் தேதி சவரனுக்கு  ரூ.29,016 என்பதுதான் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக இருந்தது. இந்த விலை உயர்வை நேற்றுமுன்தினம் ரூ.29,440 என விலை உயர்ந்து முறியடித்தது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர். வரும் வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டும் என்ற அதிர்ச்சி தகவலும் அளிக்கின்றனர். உலக பொருளாதாரம்  வீழ்ச்சி கண்டுள்ளதும் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்திருப்பதும் இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்து இருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்காக நகை வாங்கும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர். எப்போதுமே நடுத்தர வர்க்கத்தினர்  மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட செலவுகளுக்காக ஒதுக்கி வைப்பார்கள். கடந்த மாதம் வரை தங்கம் வாங்க ஒரு தொகையை அவர்கள் ஒதுக்கி வைத்திருந்த நிலையில், இம்மாதம் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை  உச்சம் கண்டிருப்பதால் அவர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: