×

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி மத்திய அரசின் இலக்கு சாத்தியம்தான்...சொல்கிறார் பிரணாப் முகர்ஜி

கொல்கத்தா: இன்னும் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி என்பது இந்தியாவுக்கு சாத்தியம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  மேற்கு வங்கம் கொல்கத்தாவில் கார்ப்பரேட் ஆலோசகர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:  இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சாத்தியமான ஒன்று தான். ஆனால், நிதி நிர்வாகம் மிக முக்கியம். எல்லா வகையிலும் வருவாய், செலவினங்களை சீர்தூக்கி நிதி மேலாண்மை சீராக இருப்பின் அடுத்த  ஐந்தாண்டுகளில் இலக்கிட்ட படி இந்தியாவை 5 லட்சம் ேகாடி டாலர் பொருளாதார நாடாக மாற்றுவோம் என்று மத்திய அரசு சொல்வது சரி தான்.

  ஜிஎஸ்டி வரி விதிப்பை பொறுத்தவரை அருமையான ஒன்று தான். ஆனால், அதில் மத்திய அரசு அறிவித்தபடி தெளிவில்லை. கடந்தாண்டு முதல் சில துறைகளில் தொடர்ந்து இறங்குமுகம் என்பது பொருளாதார தேக்க நிலையை  வெளிக்காட்டி வருகிறது. இதனால் தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சற்று குறைய காரணமாக இருந்துள்ளது. நிதி மேலாண்மையை பொறுத்தவரை அரசிடம் திடமான கொள்கைகள் தேவை. அதில் இருந்து சிறிதளவு கூட நழுவாமல், தேக்கம் ஏற்பட்டு விடாமல் செயல்பட வேண்டும்.  அப்படி இருப்பின், மத்திய அரசு ஐந்தாண்டு இலக்கை சுலபமாக  கடந்து விட முடியும். பொதுவாக முதலீடு மிகமிக முக்கியம். முதலீடுகள் இல்லாமல் எந்த வளர்ச்சியும் சாத்தியமில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதே முதலீடுகள் தான். இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசும்  இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். முதலீடுகள் குறைவதாக தெரிந்தால் விழித்து கொள்வது நல்லது.

இப்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை நாம் எட்டியாக வேண்டும். அதற்கேற்ப, பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, நாட்டின் கரன்சி மதிப்பு சீராக இருக்க வேண்டும். தொடர்ந்து சரிந்து விட  அனுமதிக்க கூடாது. இதற்கெல்லாம் முதலீடுகள் பெருகினால் தான் நல்லது. பல்வேறு வரிகளை இணைத்து ஜிஎஸ்டி வரிமுறை ெகாண்டு வந்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால், பலருக்கும் குழப்பம் ஏற்படும் வகையில் தெளிவில்லாமல் வைக்க கூடாது. ஜிஎஸ்டி வரி முறை பற்றி வர்த்தகர்கள், முதலீடு  செய்வோருக்கு தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு குழப்பம் வரக்கூடாது; குழப்பம் வந்தால் தேவையற்ற பீதி ஏற்படும். கடந்த சில ஆண்டாக கம்பெனிகளில் ேமாசடிகள், நிதி மோசடிகள் கவலையை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க நடவடிக்கைகள் தேவை. அரசு சமீபத்தில் அறிவித்துள்ள, முதலீடுகளை பெருக்கும் வரி சலுகைகள், வங்கிகளுக்கு நிதி போன்றவை  பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

Tags : Pranab Mukherjee says the $ 5 trillion economic growth is the central government's goal
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...