ஜனநாயக உரிமையை மறுப்பதை விட பெரிய தேச விரோதம் எதுவுமில்லை: பிரியங்கா காந்தி காட்டம்

புதுடெல்லி: ‘காஷ்மீரில் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரிய அரசியல் மற்றும் தேச விரோதம்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால்,  அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள், போராட்டங்களை தடுப்பதற்காக  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில், இம்மாநில நிலவரத்தை நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம்  ஜம்மு காஷ்மீர் சென்றது. நகர் விமான நிலையம் சென்ற அவர்களை,  அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜம்மு காஷ்மீரில் இதே போன்ற நிலை இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும்? நாட்டுப் பற்று என்ற பெயரில்  லட்சக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் நசுக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக கூறி குற்றம் சாட்டுபவர்கள், காஷ்மீரில் ஜனநாயகம் மறுக்கப்படுவதை காட்டிலும், மிகப்பெரிய  அரசியல், தேச விரோதம் எதுவும் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.  இதற்கு எதிராக குரல் கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். நாம் இதனை செய்வதை நிறுத்தக் கூடாது,’ என்று கூறியுள்ளார்.  மேலும், விமானத்தில் செல்லும் போது காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும், அங்கு தனது குடும்பத்தினரும், உறவினர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் முறையிடும் வீடியோவையும் பிரியங்கா  காந்தி  பதிவிட்டுள்ளார்.

Related Stories: