×

கூட்டணி கட்சிகளுடன் எப்படி செயல்பட வேண்டுமென காங்கிரசாருக்கு சோனியா கற்றுத் தர வேண்டும்: தேவகவுடா பரபரப்பு பேட்டி

பெங்களூரு: ‘‘கூட்டணி கட்சிகளுடன் எப்படி செயல்பட வேண்டுமென காங்கிரசாருக்கு குறிப்பாக, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியா காந்தி கற்றுத்தர வேண்டும்,’’ என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.  கர்நாடகாவில் நடந்து வந்த மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, பாஜ.வின் எடியூரப்பா முதல்வர் பதவியை ஏற்றார். ஆட்சியை இழந்த சோகத்தில்  உள்ள மஜத, காங்கிரஸ் தலைவர்கள் இடையே, ஆட்சியை இழப்பதற்கு  யார் காரணம் என்பது தொடர்பாக தற்போது மோதல் வெடித்துள்ளது.  இம்மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த முன்னாள்  முதல்வர் சித்தராமையா சில தினங்களுக்கு முன் நிருபர்களுக்கு பேட்டி  அளிக்கையில்; கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி  கவிழ்ந்ததற்கு முன்னாள் பிரதமர்  தேவகவுடாவும், முன்னாள் முதல்வர்  குமாரசாமியுமே காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இவரின் இந்த  குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன்,  மஜதவினரையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், சித்தராமையாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் பிரதமர் தேவகவுடா  நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கையில், நாடு முழுவதும் மதசார்பற்ற கட்சிகளை  ஒன்று சேர்த்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்  என்பது சோனியாகாந்தியின்  விருப்பமாகும். இதற்கு முன் கூட்டணி கட்சிகளுடன் எப்படி செயல்பட வேண்டும்  என்பதை காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி  முடிவெடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கர்நாடகாவில் காங்கிரஸ்  கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் வகையில் செயல்படும் சில சதிகாரர்களை  சோனியா காந்தி களையெடுக்–்க வேண்டும். அப்போதுதான் கர்நாடகாவில், மதசார்பற்ற  கட்சிகள் ஆட்சிக்கு வர  முடியும். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் கொள்கை  சித்தாந்தங்களை கடைபிடிப்பவர்களை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும்.

சுய  நலத்திற்காக காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை புறக்கணிப்போரை சோனியா  புறக்கணிக்க வேண்டும். என்னை அரசியலில் இருந்து வீழ்த்தவேண்டும் என சிலர்  சதி திட்டம் தீட்டினர். ஆனால், தற்போது எனக்கு எதிராக சதி  செய்தவர்களே சதி  வலையில் சிக்கிக்கொண்டு ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.  எனக்கு எதிராக சதி  திட்டம் தீட்டிய சித்தராமையா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை  மாநில மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி கவிழ  காரணம் நானும் குமாரசாமியும் தான் எனக்கூறிய  சித்தராமையாவுக்கு  பொறுத்திருந்து பதில் கூறுகிறேன்.

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி  கவிழ்ந்து மறுநாளே மாநில மக்கள் என்ன பேசுகிறார்கள், ஆட்சி கவிழ யார்  காரணம் என்பதை மக்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்பது சித்தராமையாவுக்கு  நன்கு தெரியும்.  தேவகவுடாவை அரசியலில் இருந்த வீழ்த்த வேண்டும் என  முன்வந்தவர்கள் ஒட்டுமொத்த அரசியலில் இல்லாமல் போய் விட்டார்கள் என்பது  கர்நாடக அரசியலில் தெரிந்த ஒன்று என்பதை சித்தராமையா மறக்கக்கூடாது.  சித்தராமையா  மஜதவுக்கு செய்த துரோகத்தை மக்களிடம் எடுத்துக் கூறலாம்.  அவர்களே தீர்ப்பு வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Sonia should teach Congressman how to work with coalition parties: Devakauda
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...