‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் சாகச வீரர் பியர் கிரில்சுடன் இந்தியில் பேசியது எப்படி?: ரகசியத்தை உடைத்தார் மோடி

புதுடெல்லி: டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் தான் இந்தியில் பேசியதை  தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் புரிந்து கொள்வதற்கு தொழில்நுட்பம் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு சாகசங்களை செய்து வருபவர் பியர் கிரில்ஸ். பிரதமர் மோடி இவருடன் இணைந்து சமீபத்தில் இமயமலையின் ஆபத்தான வனப்பகுதிகளில்  சாகச பயணம் மேற்கொண்டார். இது, உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மோடி முழுக்க முழுக்க இந்தியில் பேசினார். அதற்கான பதில்களையும், கேள்விகளையும் பியர் கிரில்ஸ் ஆங்கிலத்தில் அளித்தார்.  அதனால், பியர் கிரில்சுக்கு இந்தி தெரியுமா? அல்லது நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டதா என சந்தேகம் எழுந்தது.  

இந்நிலையில், இது குறித்த ரகசியத்தை பிரதமர் மோடி தனது, ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று வெளியிட்டார். இதில் பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது; பியர் கிரில்ஸ் எப்படி இந்தியை எவ்வாறு புரிந்துகொண்டார் என்று சிலர் தயக்கத்துடன் கேள்வி எழுப்பினார்கள்.  நிகழ்ச்சியானது எடிட் செய்யப்பட்டதா? ஒரு நிகழ்ச்சிக்காக எத்தனை முறை  படப்பிடிப்பு நடத்தப்பட்டது? எப்படி இது நிகழ்ந்தது?  என மிகுந்த  ஆர்வத்துடன் மக்கள் கேட்டனர். இதில் எந்த ரகசியமும் இல்லை. மேலும், பலர் இது  குறித்த கேள்வியை தங்களுக்குள்ளேயே வைத்துள்ளனர். எனவே, நான் அந்த  ரகசியத்தை உடைத்து விடுகிறேன்.

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் எனக்கும், தொகுப்பாளர் பியர் கிரில்சுக்கும் இடையே நடந்த உரையாடலுக்கு தொழில்நுட்பம் மிகவும் விரிவாக பயன்படுத்தப்பட்டது. எப்போதெல்லாம் நான் பேசுகிறேனோ, உடனடியாக அது ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்படும். பியர் கிரில்ஸ் தனது காதில் மிக சிறிய கார்ட்லெஸ் கருவியை பொருத்தியிருந்தார். எனவே, நான் இந்தியில் பேசியதை அவர் ஆங்கிலத்தில் கேட்டார். இதனால், இருவராலும் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.  இது தொழில்நுட்பத்தின் மிக அற்புதமான அம்சமாகும்.  இயற்கை மற்றும் வனம், வனவிலங்குகளுடன் தொடர்புடைய இடங்களுக்கு சென்று பார்வையிடுங்கள். வடகிழக்கு பகுதிக்கு கண்டிப்பாக செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: