6 தீவிரவாதிகள் ஊடுருவலில் மர்மம் நீடிப்பு 4வது நாளாக தமிழகம் முழுவதும் உஷார்...கோவையில் தீவிர கண்காணிப்பு

கோவை: தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவல் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது; தமிழகம் முழுவதும் நேற்று 4வது நாளாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அச்சுறுத்தலுக்குள்ளான கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து 5 பேர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 6 தீவிரவாதிகள், தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக கடந்த 22ம் தேதி மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இவர்கள், கோவையின் முக்கிய இடங்கள், குன்னூர் ராணுவ  பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் நாச வேலைக்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. மத்திய உள் துறை அமைச்சகத்தின் மூலமாக கோவையில் உள்ள உளவுப்பிரிவு போலீசாருக்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.   இதைதொடர்ந்து, 22ம் தேதியில் இருந்து நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர், புறநகரில் 3,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 நகரில் 17 இடத்திலும், புறநகரில் 26 இடத்திலும் மணல் மூட்டை அடுக்கி  வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்திற்கு ெரட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கோயில், தேவாலயம், ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் மற்றும்  மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4வது நாளாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நுண்ணறிவு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு, மத்திய உளவுப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமையினர் தீவிரவாதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத  கும்பலுடன் தொடர்புடைய நபர்களின் ஆன்லைன் தொடர்பு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கோவை வந்த தீவிரவாதியின் பெயர் இலியாஸ் அன்வர் என தெரியவந்துள்ளது.  மற்ற 5 பேரின் பெயரை உளவுப்பிரிவு போலீசார் வெளியிடவில்லை. தீவிரவாதிகள் 6 பேர் ேகாவையிலேயே முகாமிட்டிருக்கலாம், அவர்கள் சதி திட்டத்தை அரங்கேற்ற முயற்சிக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி  நெருங்கி வரும் நேரத்தில் விழாவை சீர்குலைத்து பதற்ற நிலையை ஏற்படுத்த தீவிரவாத கும்பல் முகாமிட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. உளவுப்பிரிவில் உள்ள சுமார் 300 போலீசார் கோவையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தகவல் சேகரித்து தீவிரவாதிகளை கண்டறிய முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக நகரின் பதற்றமான  பகுதிகளில் இரவு பகலாக ‘மப்டி’ போலீசார் சாதாரண நபர்கள் போல் நடமாடி வருகின்றனர். இதுதவிர, தேசிய புலனாய்வு முகமையினர் கோவை நகரில் பல்வேறு இடங்களில் ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் உள்ளவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் 2பேர் சிக்கினர். இதில் ஒருவர் சித்திக். கேரள மாநிலத்தை  சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தொடர்புடைய அப்துல்காதர் ரகீம் என்பவருடன் நட்பில் இருப்பது தெரியவந்தது. மற்றொருவர் ஜாகிர். இவர்கள் இருவரும் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். எனினும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு  ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவாலயங்களில்: நாகப்பட்டினம்  மாவட்டம் வேளாங்கண்ணியில் வரும் 29ம் தேதி பேராலய திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது. கொடியேற்ற  விழாவையொட்டி பக்தர்கள் நடைபயணமாக  வருவார்கள். இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், பேராலயத்தில் 24 மணி  நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  நேற்று பேராலயத்துக்கு வந்த பக்தர்கள்  சோதனைக்குபிறகே அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கமாக,  ஞாயிற்றுக்கிழமை தினத்தில் தேவாலயங்களில் பிரார்த்தனைக்காக கிறிஸ்தவர்கள்  அதிகளவில் வருவார்கள். இதனால், பாதுகாப்பு கருதி முக்கிய தேவாலயங்களில்  நேற்று கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

தொழிலாளர்  போர்வையில் ஊடுருவலா?:  திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவு வேலை பார்க்கின்றனர். எனவே, தொழிலாளர்கள் போர்வையில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்க வாய்ப்பு  இருப்பதால் 4வது நாளாக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் சந்தேகப்படும் நபர்களை போலீசார் பார்த்தால், அவர்களின் விவரங்களை பெற்று விசாரித்த பின்னரே அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக,  கோவையின் அண்டை மாவட்டமான ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட இடங்களில்  அரசு அலுவலகம், கோயில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல்,  தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு 4வது நாளாக நேற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

Related Stories: