புழல் சுற்றியுள்ள பகுதிகளில் பெயர் பலகைகளில் விளம்பர போஸ்டர்: முகவரி தேடி அலையும் மக்கள்

புழல்: புழல், சூரப்பட்டு, புத்தாகரம், வடபெரும்பாக்கம் மற்றும் கதிர்வேடு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பெயர் பலகையில் விளம்பர போஸ்டர்களை ஒட்டி மறைத்துள்ளதால் புதிதாக வரும் மக்கள் முகவரி தெரியாமல் அலையும் நிலை உள்ளது. புழல், சூரப்பட்டு, புத்தாகரம், வடபெரும்பாக்கம் மற்றும் கதிர்வேடு பகுதிகளில் மாநகராட்சிக்கு எல்லைக்குள் சேர்க்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பலகைதான் உள்ளது. அதில் உள்ள பெயர் மீது அரசியல் கட்சி விளம்பரம் மற்றும் ‘காலமானார்’ என்பது போன்ற விளம்பரம் வைத்து மறைத்து வைத்தனர்.குறிப்பாக புழல், சூரப்பட்டு கதிர்வேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களின் பெயர் பலகைகளில் அனைத்திலும் ஒரு எழுத்துக்கூட தெரியாமல் விளம்பர போஸ்டர் ஓட்டியுள்ளனர். இதனால் இந்த பகுதிகளுக்கு புதிதாக வரும் பொதுமக்களும் தபால் ஊழியர்கள், கொரியர் ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் முகவரி தெரியாமல் திணறி வருகின்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரிலும் புகார் மனு மூலமும் தகவல் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே இனியும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் பெயர் பலகைகளை முறையாக பராமரிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சி சார்பில் அந்தந்த வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் பெயர் பலகைகளை வைத்துள்ளனர். ஆனால் தங்கள் பகுதியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி, சீமந்த நிகழ்ச்சி என விளம்பர போஸ்டர்களை அச்சடித்து தெரு பெயர் பலகை மீது ஓட்டியுள்ளனர். இதனால் எந்த தெரு? எந்த சந்து? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பெயர் பலகையை ஒழுங்காக பராமரித்தால் யாரிடமும் முகவரி கேட்டு அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த விஷயத்தில் மாநகராட்சி மட்டும் சரியாக இருந்தால் போதாது. மக்களும் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் நடக்காது’’ என்றனர்.

Related Stories: