அம்பத்தூர் மண்டலத்தில் தெருக்களில் குப்பை குவியல்: பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம், புதூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம், பாடி, கொரட்டூர்,  முகப்பேர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள 15 வார்டுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பத்தூர் மண்டலம் முழுவதும் சுமார் 10,000 டன் குப்பைகள் மாதந்தோறும் சேர்கின்றன. இந்த குப்பைகளை 365 மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் 1400க்கும் மேற்பட்ட தேசிய நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்  ஊழியர்களும் அகற்றி லாரிகள் மூலம் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக அம்பத்தூர் மண்டலத்தில் குப்பைகள் சரிவர அள்ளாததால்  முக்கிய சாலைகள், தெருக்களில் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் மண்டலத்தில் பல இடங்களில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்ட தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகின்றன.

இவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் இடையூறு ஏற்படுகின்றன. இவ்வாறு தேங்கி கிடக்கும் குப்பைகளால் தூர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு சாலை, தெருக்களை கடந்து செல்கின்றனர்.  இதனால் மேற்கண்ட பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், பல நாட்களாக தேங்கிக்கிடக்கும் குப்பைகள் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் மக்கி தூர்நாற்றம் வீசுகிறது. இதில்  இருந்து லட்சக்கணக்கான கொசுக்கள் ஊற்பத்தியாகின்றன. இந்த கொசுக்கள் கடித்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விஷ காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதோடு  மட்டுமில்லாமல் பலர் மர்ம காய்ச்சலுக்கு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் அம்பத்தூர் மண்டலத்தில் குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அம்பத்தூர் மண்டலத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கூடுதல் துப்புரவு ஊழியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு குப்பைகளை அகற்ற போதிய மூன்று சக்கர வண்டிகள் வழங்கிடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஊழியர்கள் பற்றாக்குறை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘அம்பத்தூர் மண்டலத்தில் குப்பைகளை முழுமையாக அகற்ற சுமார் 3 ஆயிரம் துப்புரவு ஊழியர்கள் வேண்டும். ஆனால் சுமார் 1800 பேர் தான் உள்ளனர்.  மேலும், குப்பை அள்ளும்  மூன்று சக்கர சைக்கிள், லாரிகள் பழுதாகி கிடக்கிறது. இதனை சரி செய்து தருவது கிடையாது. புதிய சைக்கிளும் தருவது இல்லை. குப்பைகளை அள்ள ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓய்வு, இறப்பு, காலி பணி இடங்களை நிரப்பாமல் உள்ளனர். மேலும், துப்புரவு ஊழியர்களின் பிரச்னைகளை அதிகாரிகள் தீர்த்து வைப்பது இல்லை. இதனால், துப்புரவு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி துப்புரவு ஊழியர்களில் பலர் பணிக்கு வருவதில்லை. அவர்களில் சிலர் அரசு அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்கின்றனர். பலர் அதிகாரிகளின் வாகனங்களுக்கு டிரைவர்களாகவும், அலுவலக எடுபிடிகளாகவும் வேலை செய்கின்றனர். இதனால் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன’’ என்றனர்.

Tags : Garbage dump,streets,Ambattur zone,health disorder , general public
× RELATED தேவகோட்டை குப்பை மேட்டால் சுகாதார...