சென்னை மாநகராட்சியில் ஜீரோ வேஸ்ட் நடைமுறையை ஊக்கப்படுத்த குப்பைத் திருவிழா: மாரத்தான் ஓட்டத்தில் ஆணையர் பங்கேற்பு

சென்னை:  ஜீரோ வேஸ்ட் நடைமுறையை ஊக்கப்படுத்துவதற்காக அண்ணாநகர் டவர் பூங்காவில் நேற்று குப்பை திருவிழா நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை அனைத்தும் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. இவற்றில் 384 டன் மக்கும் குப்பை பல்வேறு முறைகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, சென்னை மாநகராட்சி பூங்காக்களில் உருவாகும் குப்பை அந்த இடத்திலேயே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், குப்பையை 100 சதவீதம் தரம் பிரித்து வழங்குதல் மற்றும் அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யும் முறையை (ஜீரோ வேஸ்ட்) ஊக்கப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு குப்பை மறுசுழற்சி செய்வது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குப்பை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகிறது. அதன்படி 6வது குப்பை திருவிழா நேற்று காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு “ரேஸ் டூ ஜீரோ வேஸ்ட்” என்ற தலைப்பில் 5 கி.மீ தூரத்துக்கு மாரத்தான் போட்டியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்று ஓடினார். இதில் துணை ஆணையர் (கல்வி) பி.குமரவேல் பாண்டியன், மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மண்டல அலுவலர், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில் குப்பை மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் குப்பை மறுசுழற்சி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பை மேலாண்மை தொடர்பான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திடக்கழிவு மேலாண்மை வல்லுனர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்பேட்டி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Related Stories: