மாதவரம் டாஸ்மாக் பாரில் மது விற்பனை புகார் அளித்த வக்கீலுக்கு போலீஸ் எஸ்.ஐ மிரட்டல்: வைரலாகும் வாட்ஸ் அப் ஆடியோ

திருவொற்றியூர்: மாதவரம் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக வழக்கறிஞர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் போலீசில் புகார் அளித்தார். மேலும் இதனை தெரிந்துகொண்ட எஸ்.ஐ தன்னை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தாகவும் அந்த வாட்ஸ் அப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செம்பியத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோ.தேவராஜன் என்பவர் கொரட்டூர், மாதவரம், புழல், அம்பத்தூர் போன்ற பகுதிகளில் அரசு மதுபான பார்களில் காலை 5 மணி முதல் 11.50 மணி வரை சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அந்த புகாரின் மீது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து விதிமுறைகள் மீறி மதுபானங்கள் விற்கப்படுவது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று காலை மாதவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாதவரம் 200 அடி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் காலை 9.40 மணிக்கு சட்ட விரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக காவல்துறை வாட்ஸ்அப் மூலம் புகார் அளித்தார். இதை தெரிந்து கொண்ட மாதவரம் உதவி ஆய்வாளர் ஒருவர் (ரவி) தன்னை (தேவராஜன்) கைபேசி மூலம் தொடர்பு கொண்டு மரியாதை குறைவான வார்த்தைகளில் திட்டியதாக காவல்துறை வாட்ஸ் அப் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கொடுத்தார். மேலும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் பதிவு செய்தார். இது சம்பந்தமான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் மாதவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Police SI,intimidates, lawyer , selling liquor,Task Bar
× RELATED எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு 3 பேரின்...