×

திருவொற்றியூரில் முறையாக பராமரிக்காததால் பழுதடைந்த குப்பை வாகனங்கள்

* பாதசாரிகளுக்கு இடையூறு
* அப்புறப்படுத்த கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் குப்பைகளை ஏற்றிச்செல்லும் ரிக்‌ஷாக்கள் பழுதடைந்து சாலையில் ஓரத்தில் உள்ள குப்பை தொட்டியில் மாதக்கணக்கில் கிடக்கிறது. இதனால் சாலையில் குப்பை சேகரமாகி அந்த பகுதியே துர்நாற்றம் ஏற்படுகிறது. திருவொற்றியூர் மண்டலம் 8வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் குப்பை இல்லா நகரம் என்ற திட்டத்தின் கீழ் தெருக்களில் தொட்டிகளை வைத்து சேகரிக்காமல் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை நேரடியாக குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு எடுத்துச் சென்று தரம் பிரிக்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பல வார்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பெரியார் நகர் பிரதான சாலையில் குப்பைகளை கொட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய ஏராளமான இரும்பு தொட்டிகளை வைத்திருப்பதோடு சைக்கிள் ரிக்ஷாக்கள் பழுதான பழுதாகி நாள் கணக்கில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இந்த தொட்டி மற்றும் பழுதான இருசக்கர வாகனங்களுக்கு இடையே ஏராளமான குப்பைகள் சிதறிக் கிடக்கிறது. மேலும், தரம் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகளை மூட்டை மூட்டையாக அங்கு அடுக்கி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையில் அருகிலேயே அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அம்மா உணவகம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவை இருப்பதால் மாணவ, மாணவர்களும், பொதுமக்களும் அதிகமாக நடமாடக் கூடிய பகுதியாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லக்கூடியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த குப்பை தொட்டிகளை அப்புறப்படுத்தி இந்த இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Defective,garbage,vehicles , Thiruvananthapuram
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...