×

அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் கட்டிடங்கள் கட்டி சாலை ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

அம்பத்தூர்: அம்பத்தூரில் இருந்து வெங்கடாபுரம், கே.கே.ரோடு கருக்கு மெயின் ரோடு, அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக கொரட்டூர் செல்லும் சாலை வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஆவடியில் இருந்து அம்பத்தூர் சிடிஎச் சாலை வழியாக சென்று வர வேண்டுமானால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். இதை தவிர்க்க ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூரை சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள் கருக்கு மெயின் ரோடு வழியாக சென்னை மாநகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். துவக்கத்தில் கருக்கு மெயின் ரோடு 60அடி அகலம் கொண்ட சாலை ஆக இருந்தது. பின்னர் நாளடைவில் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு சாலை குறுகி 20 அடி முதல் 30 அடி வரை அகலத்தில் உள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் பல்வேறு தரப்பு வாகன ஓட்டிகளும் கருக்கு மெயின் ரோட்டில் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். மேலும் குறுகிய சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது விபத்துக்களில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து  கருக்கு மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி சாலையை விரிவுபடுத்தவும்,  முறையாக வேகத் தடைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த சாலையில் தற்போது அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் வர முடியவில்லை. இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அடிக்கடி காயம் அடைகின்றனர். இதோடு மட்டுமில்லாமல் பல இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் குறுகி உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலை ஓரங்களில் நடந்து செல்லும்போது மற்ற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இச்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். சாலைகளில் பல இடங்களில் வேகத்தடைகள் இல்லை.

மேலும், சில இடங்களில் சாலை ஓரத்தில் வியாபார நிறுவனங்களின் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. இதனால் பாதசாரிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர். இனியும் அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும்’’ என்றனர்.



Tags : Road building ,Ambattur block, Occupation ,motorists
× RELATED திருவண்டார்கோவில்- கொத்தபுரிநத்தம் சாலையை சீரமைக்க கோரிக்கை