விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு விமானி சாமர்த்தியத்தால் 183 பேர் உயிர்தப்பினர்

சென்னை: விமானத்தில் சரியான நேரத்தில் இயந்திரக்கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் உள்பட 183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து உதய்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 178 பயணிகள் 5 விமான ஊழியர்கள் உட்பட 183 இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது  திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இந்நிலையில் விமானம் தொடர்ந்து பறப்பது பெரும் ஆபத்து என சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்துள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை மேற்கொண்டு இயக்கவேண்டாம். மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விமான நிலைய ஓடு பாதையை சுற்றிலும் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக்குழுவினர், அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டனர்.

பின்பு அந்த விமானம், காலை 10.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறக்கி ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டனர். பின்பு விமான நிலைய இன்ஜினியர்கள், விமானத்திற்குள் ஏறி விமானத்தை சுமார் இரண்டு மணி நேரம் பழுது பார்த்து சரி செய்யப்பட்டது. பின்பு பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டு நேற்று 12.45 மணிக்கு அந்த விமானம் மீண்டும் உதய்பூர் புறப்பட்டுச்சென்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள டிஜிசிஏ எனப்படும் விமானம் மற்றும் விமானப் பயணிகள் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் இந்த சம்பவம் பற்றி நேற்று பிற்பகல் முழு விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது விமான நிலையத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: