டிராவை நோக்கி கொழும்பு டெஸ்ட் நியூசிலாந்து முன்னிலை

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 244 ரன் குவித்து ஆல் அவுட்டானது ( 90.2 ஓவர்). தனஞ்ஜெயா டிசில்வா 109, கேப்டன் கருணரத்னே 65, குசால் மெண்டிஸ் 32 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 4, போல்ட் 3, கிராண்ட்ஹோம், சாமர்வில்லி, அஜாஸ் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்திருந்தது. டாம் லாதம் 111 ரன், வாட்லிங் 25 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த போட்டியின் முதல் 2 நாள் ஆட்டமும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டமும் அவ்வப்போது மழையால் தடைபட்டது.  

டாம் லாதம் 154 ரன் (251 பந்து, 15 பவுண்டரி) விளாசி தில்ருவன் பெரேரா பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். 4ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன் எடுத்துள்ளது. வாட்லிங் 81 ரன் (208 பந்து, 4 பவுண்டரி), கிராண்ட்ஹோம் 83 ரன்னுடன் (75 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, நியூசிலாந்து அணி 138 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Colombo,Test,New Zealand, draw
× RELATED இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ 2வது டெஸ்ட் போட்டியும் டிரா