×

ஆஸி.யுடன் 3வது டெஸ்ட் ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்சின் அதிரடி ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-1 என சமநிலை ஏற்படுதியது. ஹெடிங்லி மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா179 ரன் எடுத்த நிலையில், இங்கிலாந்து 67 ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 112 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 246 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.இதையடுத்து, 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 7, ராய் 8, டென்லி 50 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் 75 ரன், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ரூட் மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்த்து (77 ரன், 205 பந்து, 7 பவுண்டரி) லயன் சுழலில் வார்னர் வசம் பிடிபட்டார். அடுத்து ஸ்டோக்சுடன் பேர்ஸ்டோ இணைந்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 86 ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோ 36 ரன் எடுத்து (68 பந்து, 4 பவுண்டரி) வெளியேற, அடுத்து வந்த பட்லர், வோக்ஸ் இருவரும் தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர்.ஜோப்ரா ஆர்ச்சர் 15 ரன்னில் வெளியேற, ஸ்டூவர்ட் பிராடு டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இங்கிலாந்து அணி 286 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து திணறியதால் ஆஸ்திரேலியா நிச்சயம் வெற்றி பெறும் என்றே அனைவரும் முடிவுக்கு வந்தனர்.ஆனால், ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் விடுவதாக இல்லை. கடைசி விக்கெட்டுக்கு ஜாக் லீச் கட்டை போட, சிக்சராக விளாசித் தள்ளிய ஸ்டோக்ஸ் ‘அதிர்ச்சி வெற்றி’யை வசப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். இங்கிலாந்து அணி 125.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 362 ரன் எடுத்து நம்ப முடியாத வகையில் வெற்றி பெற, ஆஸி. வீரர்கள் களத்தில் ஸ்தம்பித்து நின்றனர்.

ஸ்டோக்ஸ் 135 ரன் (330 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), லீச் 1 ரன்னுடன் (17 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 4, லயன் 2, கம்மின்ஸ், பேட்டின்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 4வது டெஸ்ட் மான்செஸ்டரில் செப்டம்பர் 4ம் தேதி தொடங்குகிறது.

Tags : England win,3rd Test,Stokes, Aussie
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...