சர்வதேச நெருக்கடிக்கு பணிந்தார் அதிபர் ஜேர் அமேசான் காட்டுத் தீயை அணைக்க களத்தில் குதித்தது பிரேசில் ராணுவம்: 44,000 வீரர்கள் விரைகின்றனர் ரியோ டி

ஜெனிரோ: சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமேசான் காட்டுத் தீயை அணைக்க, பிரேசில் அரசு ராணுவத்தை களமிறங்கி இருக்கிறது 44 ஆயிரம் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை அளித்த மிகப்பெரிய வரப்பிரசாதமான அமேசான் மழைக்காடுகள் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளன. புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதனால், இக்காடுகள் ‘பூமியின் நுரையீரல்’ என போற்றப்படுகிறது. தற்போது, கடந்த சில நாட்களாக அமேசான் காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவி வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.கடந்த ஆண்டைக் காட்டிலும், இம்முறை காட்டுத்தீ சம்பவங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதால் பருவநிலை மாற்றம் குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், பிரேசில் அரசோ இந்த விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. அந்நாட்டின் அதிபர் ஜேர் போல்சோனரோ, அமேசான் காடுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளன.

சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதிபர் போல்சோனரோ காட்டுத் தீயை அணைப்பதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். பிரேசிலின் பொருளாதார வளர்ச்சிக்கு அமேசான் காடுகள் மிகப்பெரிய தடையாக இருந்து வருவதாக கூறி வந்த போல்சோனரோ, தற்போது வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.அமேசான் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமேசான் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 44,000 ராணுவ வீரர்கள்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல்கட்டமாக 700 வீரர்கள் ரான்டோனியாவின் போர்டோ வெல்ஹோவிலிருந்து புறப்பட்டு செல்கின்றனர். 2 ஹெர்குலஸ் சி-130 ரக விமானம் மூலம் 12,000 லிட்டர் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபடும். படிப்படியாக பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அமேசான் காடுகளை பாதுகாப்பதில் பிரேசில் அரசு அக்கறை கொண்டுள்ளது. ஏற்கனவே காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்ட இடங்களிலேயே காட்டுத் தீ பரவியிருக்கிறது. மழைக்காடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அமேசான் காட்டுத்தீ தொடர்பாக ஜி7 மாநாட்டில் அவசர ஆலோசனை நடத்தவும் கோரிக்கை விடுக்கிறேன்,’’ என்றார்.

இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவுவதாக பிரேசிலின் ராணுவ அமைச்சர் அஜிவெடோ கூறியிருக்கிறார். பிரேசிலுடன் வர்த்தக உறவை துண்டித்துக் கொள்ள வேண்டுமென கூறிக் கொண்டிருக்கும் பிரான்ஸ் அரசு கூட தற்போது கீழிறங்கி வந்துள்ளது. அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ‘‘உலகிற்கே ஆக்ஸிஜனை வழங்கும் காட்டிற்கு நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இதற்காக முதலில் பிரேசிலுக்கு உதவ வேண்டும்,’’ என கூறி இருக்கிறார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெலும், ‘‘ஜி7 நாடுகளின் தலைவர்கள் இனியும் மவுனமாக இருக்கக் கூடாது. அமேசான் காட்டுத் தீயை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என தீர ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்,’’ என்றார்.
எனவே, அமேசான் காட்டுத்தீ சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

‘நுரையீல் முக்கியம்’ போப் வலியுறுத்தல்

அமேசான் காட்டுத் தீ குறித்து வாடிகனில் போப் பிரான்சிஸ் அளித்த பேட்டியில், ‘‘அமேசானில் காட்டுத் தீ பரவி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. அமேசான் எனும் வன நுரையீரல் நமது புவிக்கோளத்திற்கு மிக முக்கியமானதாகும். அதை பாதுகாப்பதும் நம் கடமை,’’ என கூறியுள்ளார்.


காட்டுத் தீ சம்பவம்: 85 சதவீதம் அதிகரிப்பு
பிரேசிலில் ஜூலை முதல் அக்டோபர் வரை வறட்சியான காலகட்டத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த ஆண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் காடுகளில் 83 சதவீதம் அளவுக்கு காட்டுத் தீ அதிகரித்துள்ளது. பிரேசில் முழுவதும் கடந்த 8 மாதங்களில் மட்டும் 77 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதில் பாதி அளவு சம்பவங்கள் அமேசான் காடுகளில் நடந்தவை. விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்படுவதும், காட்டுத் தீ பரவ முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இவ்வாறு அழிக்கப்படும் காடுகளில், விவசாய தேவைக்காக அறுவடை முடிந்ததும் விவசாயிகள் காய்ந்த பயிர்களை விவசாயிகள் தீ வைத்து எரிக்கின்றனர். இதுவே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி காட்டுத் தீயாக மாறுவதாகவும் கூறப்படுகிறது.  சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, 2018ம் ஆண்டு 7,500 சதுர கிலோ மீட்டர் காட்டு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இது, 2017ம் ஆண்டு அழிக்கப்பட்டதைவிட 65 சதவீதம் அதிகமாகும்.Tags : President ,International Crisis, Amazon jumps ,wild to extinguish,Brazilian army, 44,000 soldiers
× RELATED வால்பாறை ரோட்டில் ஒற்றை காட்டு யானை...