×

புனே அருகே மணல் மாபியா கும்பல் அட்டூழியம் டிராக்டர் ஏற்றி தாசில்தாரை கொல்ல முயற்சி: ஒருவன் கைது: 3 பேருக்கு வலைவீச்சு

புனே: புனே அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தாரை டிராக்டர் ஏற்றி கொல்ல நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தாசில்தாரும் அவருடன் இருந்த அதிகாரிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா தாசில்தாராக பணியாற்றி வருபவர் சோனாலி மெட்கரி. நேற்று முன்தினம் சோனாலியும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அரசு அலுவல் விஷயமாக இரண்டு வாகனங்களில் வெளியே சென்றனர். அவர்கள் உஜ்ஜைனி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் ஒரு டிராக்டர் மற்றும் டிராலி லாரி வந்து கொண்டிருந்தன. அவ்விரு வாகனங்களிலும் மணல் ஏற்றப்பட்டிருந்தது.இதனை கவனித்த சோனாலி மற்றும் அதிகாரிகள், மணல் ஏற்றி வந்த டிரைலர் லாரி மற்றும் டிராக்டரை வழிமறித்தனர். அப்போது, லாரியில் இருந்த டிரைவர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தார். தங்களுக்கு வழிவிடவில்லை என்றால், அரசு வாகனங்கள் இரண்டையும் இடித்து தள்ளிவிட்டு சென்று விடுவோம் என்று மணல் மாபியாக்கள் தாசில்தார் சோனாலியை பார்த்து மிரட்டினர்.

இந்த மிரட்டலுக்கு பயப்படாத சோனாலி தனது வாகனத்தில் இருந்தவாறே மணல் மாபியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது டிரைலர் லாரி முன்னால் நின்ற டிராக்டர் மீது மோதியது. அந்த டிராக்டர் அரசு வாகனம் ஒன்றின் மீது மோதியது. அந்த வாகனத்தில் இருந்த அதிகாரிகள் டிராக்டர் தங்களை நோக்கி வருவதை பார்த்ததும் கீழே குதித்து தப்பினர்.அடுத்து, தாசில்தார் இருந்த கார் நோக்கியும் டிராக்டர் முன்னேறியது. இதனை பார்த்த அதிகாரிகள் தாசில்தாரை துரிதமாக கீழே இறங்கச் செய்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். டிராக்டர் மோதியதில் தாசில்தாரின் கார் லேசான சேதமடைந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு டிராக்டர் மற்றும் டிரைலர் லாரியில் இருந்த நான்கு பேரும் தங்களது வாகனங்களை ஓட்டி தப்பிச் சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து இந்தாபூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணல் மாபியா கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவனை கைது செய்தனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Man arrested ,attempting ,kill sandal mafia ,gangster tractor,Pune , Pune
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்