இந்தாண்டு காந்தி ஜெயந்தியன்று பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்க சபதம் ஏற்க வேண்டும்: மன் கி பாத்தில் பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: ‘‘இந்தாண்டு காந்தி ஜெயந்தியை பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை  உருவாக்க சபதம் ஏற்க வேண்டும்,’’ என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மோடி முதல் முறையாக பிரதமரானதும், அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தியன்று, தூய்மை இந்திய திட்ட பிரசாரத்தை டெல்லி ராஜ்காட்டில் தொடங்கி வைத்தார். 2019ம் ஆண்டு காந்திஜியின் 150வது பிறந்த தினத்தை கொண்டாடும்போது, இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக உருாவக்க வேண்டும் என்ற இலக்குடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் ரூ.1.96 லட்சம் கோடி செலவில் 9 கோடி கழிவறைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தாண்டு காந்தி ஜெயந்தி, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவாக கொண்டாப்பட உள்ளது. இந்நிலையில், ‘தூய்மை இந்தியாவின் அடுத்த கட்டமாக பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்,’ என மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நேற்று, மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது:இந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தியிஜின் 150வது பிறந்த தினத்தை நாம் கொண்டாடும்போது, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இந்தியாவை அவருக்கு அர்ப்பணிக்க போகிறோம். மேலும், பிளாஸ்டிக்குக்கு எதிரான புதிய புரட்சியை உருவாக்கவும் அடித்தளம் அமைக்க போகிறோம். இதில், நாடு முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்க வேண்டும். இந்தாண்டு காந்தி ஜெயந்தியை பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நாளாக மக்கள் கொண்டாட வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க போதுமான ஏற்பாடுகளை நாட்டில் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், கிராம பஞ்சாயத்துகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் செய்ய வேண்டும். குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் முன்வர வேண்டும். இவற்றை நாம் மறுசுழற்சி செய்ய முடியும், எரிபொருளாக மாற்ற முடியும். இந்தாண்டு தீபாவளிக்கு முன்பாக, பிளாஸ்டிக் கழிவுகளை பாதுகாப்பாக ஒழிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த சவாலை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் சபதம் எடுக்க வேண்டும்.இந்த தூய்மை பிரசாரம் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்கள் பை கொண்டு வர வேண்டும்’ என வியாபாரம் செய்யும் அறிவிப்பு பலகைகளை பல சகோதரர்களும், சகோதரிகளும் தைரியமாக தங்கள் கடைகளில் வைத்துள்ளனர். இதன் மூலம், நாம் பணத்தை மிச்சப்படுத்தலாம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவலாம்.

Tags : Gandhi vows, build,plastic-free, India ,year
× RELATED 1/2 கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு டீ 1...