பகரைனுக்கு மோடி அழைப்பு இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தில் பங்கேற்க வேண்டும்: உயரிய விருது வழங்கி கவுரவித்தார் மன்னர்

மனாமா: ‘‘இந்தியாவின் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கில் பக்ரைனும் பங்கேற்க வேண்டும்,’’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பகரைன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு எமிரேட்ஸ் சென்ற அவர், அபதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நக்யனை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-எமிரேட்ஸ் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக அவருக்கு எமிரேட்ஸ் அரசின் மிக உயர்ந்த ‘ஆர்டர் ஆப் சயீத்’ விருது வழங்கப்பட்டது.இந்த பயணத்தை முடித்துக் கொண்டு, மோடி நேற்று முன்தினம் பக்ரைன் சென்றார். இந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு, பக்ரைன் இளவரசர் சல்மான் அல் கலிபாவை சந்தித்து மோடி பேசினார். அதில், இருநாட்டு வர்த்தக உறவுகள், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், பகரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிபாவை மோடி சந்தித்து பேசினார்.

அப்போது, இருநாட்டு உறவை வலுப்படுத்த மோடி எடுத்த முயற்சிகளுக்காக மோடிக்கு, ‘தி கிங் ஹமாத் ஆர்டர் ஆப் ரினையசன்ஸ்’ என்ற மறுமலர்ச்சி விருதை மன்னர் ஹமத் வழங்கினார். பின்னர் பேசிய மோடி, ‘‘எனது நாட்டுக்காக இந்த விருதை பெறுவதில் பெருமை கொள்கிறேன். 130 கோடி இந்தியர்களின் சார்பில் இந்த மதிப்புமிக்க விருதை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி   டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். இதில், பக்ரைனும் பங்கு பெற வேண்டும் என விரும்புகிறோம். இங்குள்ள வெளிநாட்டினரில் இந்தியர்கள் மிக அதிகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார்.

மீண்டும் பிரான்ஸ் பயணம்

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பில் இந்தியா இடம் பெறவில்லை. இருந்தாலும், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி, மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, இந்த மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக, மீண்டும் அவர் பிரான்ஸ் செல்கிறார்.இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் போன்ற சர்வதேச விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, மோடியிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவேன் என டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணன் கோயில் ரூ.30 கோடியில் சீரமைப்பு

பகரைன் தலைநகர் மனாமாவில் 200 ஆண்டு கால பழமையான ஸ்ரீநாத்ஜி என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இதை ரூ.30 கோடி செலவில் சீரமைக்கும் திட்டத்தை மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்கு வழிபாட்டை முடித்தபின், ரூபே கார்டு மூலம் பிரசாதம் வாங்கினார்.

Related Stories:

>