தகவல் தொடர்பு துண்டிப்பு, ஊரடங்கு நீடிப்பு காஷ்மீர் மக்களின் இன்றைய நிலை?: முரட்டு சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக ராகுல் வேதனை

புதுடெல்லி: காஷ்மீரில் நுழைய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அம்மாநில மக்களின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. காஷ்மீர் மக்கள் மீது முரட்டு சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு சுமார் 20 நாட்களாகியும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டே உள்ளது. ஊரடங்கு உத்தரவும் நீடிக்கிறது. இதனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் குழு நேற்று முன்தினம் காஷ்மீர் நிலைமையை பார்வையிட நகர் சென்றது. ஆனால், விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இது மேலும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து, ராகுல் காந்தி தனது டிவிட்டரில் நேற்று வேதனை தெரிவித்துள்ளார். அவர், ‘காஷ்மீர் மக்கள் சுதந்திரத்தை பறிகொடுத்து 20 நாட்களாகி விட்டது. நகருக்கு எதிர்க்கட்சி தலைவர்களும், பத்திரிகையாளர்கள் குழுவும் சென்ற போது, காஷ்மீர் மக்கள் மீது முரட்டு சக்திகளும், கொடூரமான ஆட்சி நிர்வாகமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை உணர முடிந்தது,’ என பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

மேலும், நேற்று முன்தினம் நகர் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், காஷ்மீர் ஆளுநர் அழைப்பின் பேரில்தான் வந்திருப்பதாகவும், நகரின் ஏதாவது ஒரு பகுதிகளில் தனித்தனியாக செல்ல அனுமதித்தாலும் பரவாயில்லை என ராகுல் காந்தி, அதிகாரிகளிடம் கூறுகிறார். அதற்கு அவர்கள், அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதற்கான உத்தரவை வாசித்து காட்டிய பிறகு திருப்பி அனுப்புவதாக உள்ளது.பின்னர் அங்கு பேட்டி தரும் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களுடன் சென்ற பத்திரிகையாளர்களிடம் பாதுகாப்பு போலீசார் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதாகவும், சிலர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம்சாட்டுகிறார்.இதற்கிடையே, காஷ்மீரில் மக்கள் மருத்துவமனைக்கு செல்லக் கூட அனுமதிக்கப்படுவதில்லை எனவும், ஒருவர் வெளியில் போனால் அரை மணி நேரத்தில் வீடு திரும்ப வேண்டுமென்ற கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் செய்தி நிறுவனங்கள் எந்த தகவலையும் சேகரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இத்தகவல்களை மறுக்கும் விதமாக ஆளுநர் மாளிகை நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ‘ஞாயிறு விடுமுறை தினத்திலும் நகரில் 1666 மருந்து கடைகளில் 1165 கடைகள் திறந்திருக்கின்றன. காஷ்மீரில் 65 சதவீத கடைகள் திறந்துள்ளன. மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லை. மக்களுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது. கடந்த 20 நாளில் ரூ.23.81 கோடி மதிப்பிலான மருந்துகள் மக்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டுள்ளது. சுமார் 14-18 மணி நேரத்தில் மருந்துகள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகின்றன. கடந்த 2 நாட்களாக, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் மட்டுமே லேசான தட்டுப்பாடு உள்ளது. அடுத்த 3 வாரத்திற்கு தேவையான புதிய ஸ்டாக்குகள் வந்துள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.காஷ்மீர் மக்களின் நிலை குறித்த ஆதாரப்பூர்வமான உறுதியான தகவல் எதுவும் வெளியாகாததால் மீண்டும் காஷ்மீர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

போன் துண்டிப்பால் உயிர் பலி இல்லை

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தகவல் தொடர்பை துண்டிப்பதால் மக்கள் உயிர் பாதுகாக்கப்படும் என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது? தொலைபேசி சேவை துண்டிப்பால், கடந்த 10 நாளில் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை, எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை. இதற்கு முன், காஷ்மீரில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழும் போது, அடுத்த ஒரு வாரத்தில் 50 உயிர்கள் பலியாகும். ஆனால், இம்முறை கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு உயிரும் பலியாகவில்லை. படிப்படியாக விரைவில் இயல்பு நிலை திரும்பும்,’’ என்றார்.

காஷ்மீருக்காக ராஜினாமா செய்த ஐஏஎஸ்

தாத்ரா நாகர் ஹவேலியின் எரிசக்தி துறை செயலாளராக பணியாற்றியவர் கண்ணன் கோபிநாத். கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், காஷ்மீர் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 21ம் தேதி பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாத் கூறுகையில், ‘‘காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்கள் கடந்த 20 நாட்களாக தங்களின் அடிப்படை உரிமையை இழந்து நிற்கிறார்கள். நாட்டில் உள்ள பலரும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்த வரை, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஒரு மாநிலத்திற்கே ஒட்டு மொத்த தடையை விதித்த போது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது கேள்வி எழுப்பினால், அதற்கு நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன் என்றாவது கூற வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்கிறேன்,’’ என்றார்.

Related Stories: