×

இணையதள தகவல்களை பகிரும்போது கவனம் தேவை: பிரணாப் முகர்ஜி அறிவுரை

கொல்கத்தா: ‘‘சமூக இணையதளங்களில் தகவல்களை பகிரும்போது, மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்’’ என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவுரை கூறியுள்ளார். ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடந்தது. இதில் விருதுகள் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:சமூகத்தில் ஏற்படும் மதரீதியிலான வன்முறைகள் மற்றும் பதற்றங்களுக்கு, குறும்புக்கார நபர்கள் சமூக இணையதளங்களில் பரப்பும் வதந்திகள்தான் காரணம் என கண்டறிப்படுகிறது. இது போன்ற கருத்துக்களை மக்கள் சிலர் அப்பாவித்தனமாக பகிர்வதால், அவர்களும் இந்த குறும்புக்கு காரணமாகிவிடுகின்றனர். பத்திரிகை துறை மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதில் வெளியாகும் செய்திகள், சரிபார்க்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஆனால் சமூக இணையதளத்தில் இதுபோன்ற நிலை இல்லை. அதனால் சமூக இணையதளங்களில் வெளியாகும் கருத்துக்களை பகிரும்போது, மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்போது செல்போன்கள் மூலமாக தகவல்கள் எளிதாக பரவுகின்றன. இவை பாரபட்சமின்றி இருக்க வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் செய்தியில் பாரபட்சமற்ற  நிலை இருக்க வேண்டும். பத்திரிகையாளர் ஒரு செய்தியை பல கோணத்தில் பார்க்கலாம். ஆனால் உண்மையை தெரிவிக்கும்போது, அதில் தங்கள் கருத்தை கலக்கக் கூடாது. அரசியல்சாசனம் மற்றும் ஜனநாயக கருத்துக்களை பாதுகாப்பதில் ஊடகத்தின் பங்கு பாராட்டத்தக்கது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகம், மற்ற மூன்று தூண்களை மக்களுக்கு பதில் சொல்ல வைக்கிறது. மேற்கு வங்கம்தான் இந்திய பத்திரிகை துறையின் தொட்டில். முதல் இந்திய பத்திரிகை ‘ஹிக்கி’ஸ் பெங்காள் கெஜட்’ இங்கிருந்துதான் கடந்த 1780ம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாட்டின் சுதந்திர போராட்டத்திலும, நமது சமூக மறுமலர்ச்சியிலும் பத்திரிகை துறை முக்கிய பங்கு வகித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Caution ,needed , sharing website ,information, Pranab Mukherjee's advice
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்