×

ஓசூரில் அட்டகாசம் செய்து 5 பேரை கொன்ற க்ரோபார் யானை பிடிபட்டது

* மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்
* கும்கி மூலம் லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்
ஓசூர்: ஓசூர் அருகே அட்டகாசம் செய்து 5 பேரை கொன்ற க்ரோபார் யானையை, கும்கி  யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு காட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 4  யானைகள் முகாமிட்டிருந்தன. அதில் 2 யானைகள் தேன்கனிக்கோட்டை வழியாக அடர்ந்த  வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. மீதமிருந்த 2 யானைகள் தனியாக பிரிந்து,  கெலவரப்பள்ளி அணைப்பகுதிக்கு சென்றன. இந்த 2 யானைகளும், ஓசூர் சுற்றுவட்டார  பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்  செய்து வந்தன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். அட்டகாசம்  செய்துவரும் யானைகளை விரட்ட  வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக்பில்கி தலைமையிலான  வனத்துறையினர், யானைகளை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். இந்த யானைகளுக்கு  வனத்துறையினர் மோட்டுகொம்பன், க்ரோபார் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த  சில வாரங்களுக்கு முன் இவற்றை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டினர். அங்கு சென்ற  இந்த யானைகள் விவசாயி ஒருவரை மிதித்து கொன்றதால், கர்நாடக வனத்துறையினர்  அங்கிருந்து ஓசூர் வனப்பகுதிக்கு மீண்டும் விரட்டியடித்தனர்.  ஓசூருக்கு திரும்பிய யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும்  கடந்த ஒன்றரை ஆண்டில் ஓசூர் சுற்று வட்டார பகுதியில் 4 பேரை கொன்றுள்ளது.

இதனால்,  கும்கி யானைகளின் உதவியுடன் அவற்றை மயக்க ஊசி போட்டு பிடிக்க  வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக முதுமலை டாப்சிலிப் பகுதியில்  இருந்து மாரியப்பன், பரணி என்ற 2 கும்கி யானைகளை ஓசூருக்கு அழைத்து  வந்தனர். கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் கும்கி யானைகள் உதவியுடன்  2 யானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2  நாட்களும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. நேற்று  அதிகாலை, கதிரேப்பள்ளி-பேரண்டப்பள்ளி இடையே 2 யானைகளும் இருப்பதை  வனத்துறையினர் கண்டறிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி  தலைமையில் 80 வன ஊழியர்களும், வனவிலங்குகளுக்கான சிறப்பு மருத்துவ  குழுவினரான டாக்டர்கள் கலைவாணன், மனோகரன், பிரசாத் தலைமையிலான குழுவினரும்  காலை 4 மணிக்கு அங்கு சென்றனர். பின்னர், மயக்க மருந்து செலுத்தப்பட்ட  ஊசியை துப்பாக்கியில் பொருத்தி, அட்டகாசம் செய்து வந்த க்ரோபார் யானையை  காலை 4.30 மணியளவில் குறி வைத்து சுட்டனர். தொடர்ச்சியாக 2 மயக்க ஊசிகள்  செலுத்தப்பட்டன. ஆனாலும் யானை போக்கு காட்டியது. அதை தொடர்ந்து, 3வது  ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். இதனால், யானை சற்று மயக்கமடைந்து, ஒரே  இடத்தில் நின்றது.

இதைத் தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியுடன், க்ரோபார்  யானையின் உடலில் பல மணி நேரம் போராடி கயிறு போடப்பட்டு, யானையின்  கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது. தொடர்ந்து,  யானையை வனத்துறைக்கு சொந்தமான லாரியில் ஏற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  யானை லாரியில் ஏற முரண்டு பிடித்ததால், 2 பொக்லைன் மற்றும் கும்கிகளின்  உதவியுடன் சுமார் 5மணி நேர போராட்டத்திற்கு பிறகு, யானை லாரியில்  ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து யானை அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.  மேலும் க்ரோபார் யானையுடன் சுற்றித் திரிந்த மற்றொரு யானை பட்டாசு வெடித்து  அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.  தற்போது  பிடிபட்டுள்ள யானைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், ஓசூர்  வனக்கோட்டத்திற்குள் வைத்து அதற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து  வருகின்றனர். இன்னும் ஓரிரு நாள் கழித்து, இந்த யானை முதுமலை  வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  வன அலுவலர் தீபக்பில்கி கூறுகையில்,‘க்ரோபாரை தலைவனாக கொண்டு மோட்டு  கொம்பன் சுற்றி வந்தது. இந்த 2 யானைகளும் தொடர்ந்து கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்ததால், பொதுமக்கள் கோரிக்கையின்  அடிப்படையில், க்ரோபாரை பிடித்துள்ளோம். இதனுடன் இருந்த மோட்டு கொம்பனை  தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’ என்றார்.

கடப்பாரை தந்தம்
வனத்துறையினர்  மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ள யானை கடந்தாண்டு ஓசூர் வனப்பகுதியில்  சுற்றி திரிந்த போது, இதன் வலது புற தந்தம் பாறை ஒன்றில் மோதி உடைந்து, அது  கீழ் நோக்கி உள்ளது. இதன் இடது புற தந்தம் நீண்டுள்ளது.  இதனால், அந்த  யானையை வனத்துறையினர் க்ரோபார் என பெயரிட்டனர். க்ரோபார் என்றால் கடப்பாரை  என பொருள். இந்த யானை கடந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் சூளகிரி பகுதிக்கு  வந்தது. அப்போது அங்கு அடுத்தடுத்து 3 நாட்கள் அதே பகுதியை சேர்ந்த  விவசாயிகள் ராஜப்பா, முனிராஜ், தேவன் ஆகியோரை தூக்கி வீசி கொன்றது. பின்னர்  இந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து, அடர்ந்த  வனப்பகுதியில் விட்டனர். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  வந்துள்ள இந்த யானை, தற்போது கர்நாடக மாநிலம் விவசாயி அன்னையப்பா மற்றும்  சூளகிரி தீர்த்தம் பகுதியை சேர்ந்த முனியம்மா ஆகியோரை மிதித்து கொன்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. 


Tags : Crocodile,elephant caught,Hosur killing,five people
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி