முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் அரசு மரியாதையுடன் தகனம்: தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: பாஜ மூத்த முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி (66) மூச்சு திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை, டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, பிரதமர் மோடி, பாஜ கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு  பாஜவினர், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 3 மணியளவில் ஜெட்லியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக நிகாம்போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்காண தொண்டர்கள், பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகாம்போத் மயானத்தில் அவருடைய உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அவரது மகன் ரோஷன் சிதைக்கு தீ மூட்டினார். தகனம் செய்யும் இடத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மற்றும் பாஜ தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, கபில் சிபல் உள்ளிட்டோர்  மரியாதை செலுத்தினர்.

‘என்றும் நினைவில் நிற்பார்’
அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள இரங்கல் செய்தியில், ‘தனது 40 ஆண்டு கால வரலாற்றில், அரசியலில் ஜெட்லி மிகப்பெரிய முத்திரையை பதித்துள்ளார். டாளுமன்றத்தில் இனிமேல் அவருடைய குரலை கேட்க முடியாது என்றாலும், அவர் எப்போதும் நினைவில் நிற்பார். இந்த இக்கட்டான தருணத்தில் தாங்களும், தங்களின் குடும்பமும் அமைதியையும், இந்த துயரத்தையும் தாங்கும் வலிமையையும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Former Union Finance, Minister, Arun Jaitley's, body ,honored
× RELATED இந்தியாவில் முதலீடு செய்ய தனியார்...