தமிழ் கலாசாரப்படி ஜப்பான் பெண்ணை மணந்த குடந்தை விஞ்ஞானி

கும்பகோணம் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் விவேகானந்தா நகரை சேர்ந்த ஜெயக்குமார்-கிருஷ்ணவேணி தம்பதி மகன் வசந்தன்(32). இவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கியோ பல்கலைக்கழகத்தில் இளம் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். அதே பகுதியில் உள்ள இன்னொரு நிறுவனத்தில் பணிபுரிபவர் யசுஷி சுகிமொதொ- இகுகொ தம்பதியின் மகள் மெகுமி(28). இருவரும் கடந்த 3 வருடமாக காதலித்தனர். இவர்களது திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதற்காக  சில வாரங்களுக்கு முன் இருவரும் கும்பகோணம் வந்தனர். ஆகஸ்ட் 25ம் தேதி(இன்று) திருமணம் செய்ய முடிவு செய்து, தமிழ் முறைப்படி அழைப்பிதழ் அடிக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்த அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர். அதன்படி இன்று காலை கும்பகோணம் பச்சையப்பன் முதலி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழ் கலாசாரப்படி, இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மணமகள் மெகுமி கழுத்தில் மணமகன் வசந்தன் தாலி கட்டினார்.

பின்னர் மணமக்கள் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தனர். இதைத்தொடர்ந்து திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.

இதுபற்றி மணமகள் மெகுமி கூறுகையில், நானும், வசந்தனும் 3 வருடமாக காதலிக்கிறோம். அவர் மூலம் தமிழ் கலாசாரத்தை தெரிந்து கொண்டேன். தமிழ் கலாசாரப்படி, இந்து முறைப்படி மணமகன் வழியை பின்பற்றிதான் திருமணம் செய்வார்களாம். இதனால் நானும் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். தமிழ் கலாசாரமும், மொழியும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இனி படிப்படியாக தமிழ் பெண்ணாக மாறி விடுவேன் என்று பெருமையாக கூறினார்.

Related Stories: