மயிலாடுதுறையில் 11வது முறையாக சாலையில் 20 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அச்சம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் 11வது முறையாக சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 2009ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நகரில் சேரும் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்வதற்காக 8 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு கச்சேரி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை திடீரென உள்வாங்கியது.  இதையடுத்து, ஒரு சில மாதங்களில் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் எதிரில், கிளை சிறைச்சாலை, கொத்தத்தெரு, நாஞ்சில் நாடு, கச்சேரி ரோடு, ஆர்.டி.ஓ.அலுவலகம் எதிரில் உள்ளிட்ட இடங்களில் சாலை உள்வாங்கியது. பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் வெளியேறி மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவானது தெரியவந்தது.

Advertising
Advertising

இந்நிலையில் 11வது முறையாக நேற்று காலை கொத்தத்தெரு மெயின்ரோட்டில் சாலையில் 20 அடி ஆழத்துக்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. உடன் நகராட்சி அதிகாரிகள் சென்றுபார்த்தபோது பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறி மண் அரிப்பு பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், மயிலாடுதுறை நகரில் இதுவரை 11 முறை சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக மக்கள் யாரும் அதில் சிக்கவில்லை. பாதாள சாக்கடை குழாய்கள் பல கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்துள்ளதுடன், குழாய்களில் உள்பக்கமாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லும் பகுதி சுருங்கி விட்டது. இதன்காரணமாக குறிப்பிட்ட அளவு கழிவு நீர் வெளியே செல்ல முடியாததால் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. கொத்தத்தெரு மெயின்ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் ஆய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: