×

15 ஆண்டாக சிறிது சிறிதாக சேமிப்பு லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர் : 1.83 லட்சத்தை மீட்ட போலீசார்

திருமலை : கோயில் முன்பு 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தவர் திடீரென உயிரிழந்தார். அவர் வைத்திருந்த பையில் ரூ.1.83 லட்சம் இருந்ததை போலீசார் மீட்டனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தில் உள்ள  கோதாவரி ஆற்றில் உமா  மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளியே  காஞ்சி நாகேஸ்வரராவ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும், சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அங்கேய வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மாதந்தோறும் காக்கிநாடா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் காஞ்சி நாகேஸ்வரராவின் உடல்நிலை சில நாட்களுக்கு முன்பு மிகவும் மோசமானது. நேற்று கோயில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தார்.

இதுகுறித்து ராஜமகேந்திரவரம் போலீசாருக்கும், கோயில் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காஞ்சி நாகேஸ்வர ராவ் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் 1.83 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. இந்த பணம் காஞ்சி நாகேஸ்வரராவ் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த பணத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்தை எடுத்து நாகேஸ்வரராவின் இறுதி சடங்கிற்கு பயன்படுத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மீதமுள்ள பணத்தை கோயிலில் உள்ள சாதுக்களின் நலத்திட்டத்திற்கும், அன்னதானத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : Billionaire , died, 15 years,1.83 lakh
× RELATED கடந்த 2 மாதங்களில் வெளிநாட்டில்...