தென்தாமரைகுளம் அருகே நடுரோட்டில் நிற்கும் புளியமரம்

தென்தாமரைகுளம் : தென்தாமரைகுளத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையானது எப்போதும் மிக பரபரப்பாக காணப்படும். இந்த சாலை வழியாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்துகள், ஏராளமான கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளும் செல்கின்றன. இந்த பகுதியில் காவல்நிலையம், மீன் சந்தை மற்றும் பல்வேறு கடைகளுக்கு செல்ல ஆட்கள் நடமாட்டம் எப்போதும் காணப்படும். இந்த சாலையில் காட்டுவிளை பகுதியில் நடுரோட்டில் ஒரு புளிய மரம் நிற்கிறது. சாலை அமைக்கும்போது அதிகாரிகள் இந்த மரத்தை சுற்றி தார் சாலை அமைத்துள்ளனர். தற்போது இந்த புளிய மரம் போக்குவரத்துக்கு மிக மிக இடைஞ்சலாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் மாணவ, மாணவிகள் மீது சில சமயங்களில் கிளைகளும் உடைந்து விழுந்து ஆபத்துகள் ஏற்படுகின்றன. பகல் மற்றும் இரவு வேளைகளில் எதிர் எதிரில் வாகனங்கள் வரும்போது விபத்துகள் நடக்கின்றன.

எதிர் எதிரில் வாகனங்கள் வரும்போது வாகன ஒட்டிகள் மட்டுமல்லாது, நடந்து வரும் பொதுமக்களுக்கும் பதற்றம் ஏற்படுகிறது. பெரிய வாகனங்கள் இந்த பகுதியில் வரும்போது இருசக்கர வாகனத்தில் செல்வோர் பெரிய வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது மரத்தில் மோதும் அபாயம் உள்ளது. எனவே வரும் நாட்களில் பெரும் விபத்துகள் ஏதும் நேர்ந்து விடாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: