கலெக்டர் வேலைக்கு ஆள் வேணுமாம்.. புதுக்கோட்டையை அலறவிட்ட போஸ்டர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் கலெக்டர் வேலைக்கு ஆள் தேவை என கறம்பக்குடி தாலுகா முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பகுதிகளில் முழுவதும் கருத்தாயுதக்குழு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், வேலைக்கு ஆட்கள் தேவை, மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராம புல எண் 244ல் உள்ள வெட்டுக்குளத்தை எப்படியாவது மத்திய புலனாய்வு துறை மூலமாவது கண்டுபிடித்து ஆக்ரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசியல் அமைப்பு விதிகளின் கீழ் பணி புரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை. காலிப்பணியிடங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், தகுதி- பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம்.

Advertising
Advertising

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி 10-092019. விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம். நேர்முக தேர்வுக்கு வரும்போது, அமைச்சர், ஆளும்கட்சி பிரமுகர்கள் சிபாரிசு கடிதங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கருத்தாயுதக்குழு என அச்சிடப்பட்டுள்ளது. இதை பார்த்து பொதுமக்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கறம்பக்குடி போலீசார் விசாரணையில், ‘‘கறம்பக்குடி குளத்திரான்பட்டு கிராமத்தில் வெட்டுக்குளம் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என கூறப்படுகிறது. இதனால் யாரோ இதுபோன்ற போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. நோட்டீஸ் ஒட்டியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: