நோய் வந்ததில்லை... டாக்டரை பார்த்ததில்லை... மண்ணை தின்று வாழும் 80 வயது மூதாட்டி!

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தள்ளாத வயதிலும் மூதாட்டி ஒருவர் மண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஆரோக்கியத்துடன் கம்பீரமாக உலா வரும் அவரை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள சூசையாநகரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி மரியசெல்வம் (80). இவர்களுக்கு ராஜமணி, ராஜகனி என்ற 2 மகன்களும், கனி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் ராஜமணி, சுந்தர்நகரில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் ராஜகனி விளாத்திகுளம் அருகே உள்ள வில்லுமரத்துபட்டியில் வசிக்கிறார். மகள் கனி, தங்கம்மாள்புரத்தில் உள்ளார். சுந்தரம் இறந்துவிட்டார். மரியசெல்வம் சூசையாநகரில் தனியாக வசித்து வருகிறார். தள்ளாத வயதிலும் பழைய பேப்பர், பொருட்களை சேகரித்து அதனை இரும்பு கடையில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே மண் என்றால் அலாதி பிரியம். அதனை அப்படியே எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டு விடுவார். நாளடைவில் அதனை உணவாக உட்கொள்ள ஆரம்பித்து விட்டார்.

Advertising
Advertising

முதலில் இவர், மண் சாப்பிடும் போது லேசான வயிற்று வலி மட்டும் அவருக்கு இருந்துள்ளது. அதன்பிறகு அவை அப்படியே பழகி விட்டது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் மண் சாப்பிடுவதை மரியசெல்வம் நிறுத்தவில்லை. தற்போது பசிக்கும் போது மண்ணை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். இருந்தபோதிலும் அவருக்கு உடல்நலக்குறைவு எதுவும் ஏற்பட்டது கிடையாது. நல்ல ஆரோக்கியத்துடனேயே உள்ளார். தற்போதைய உலகில் சீதோஷ்ண நிலை மாறினாலே காய்ச்சல், இருமல், தலைவலி என உடல்உபாதைகள் வந்துவிடும். குடிக்கும் தண்ணீர் கலங்கலாக இருந்தால் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் தள்ளாத வயதிலும் அசராமல் மண் சாப்பிட்டு கம்பீரமாக நடைபோட்டு உலா வரும் மூதாட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடனேயே பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து மரியசெல்வம் கூறும்போது, எனக்கு சிறுவயது முதலே மண் சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது. பழைய பேப்பர் மற்றும் பொருட்களை சேகரிக்கச் செல்லும்போது பையில் செங்கல்பொடி மற்றும் மண்ணை சேகரித்து வீட்டிற்கு எடுத்து வருவேன். அதன்பிறகு வீட்டில் உள்ள சல்லடையில் மண்ணை அரித்து கோதுமை மாவு போல் சலித்து வைத்து கொள்வேன். காலை மற்றும் மதிய வேளையில் மண் தான் எனக்கு உணவு. மண்ணை வாயில் போட்டு சாப்பிட்டு தண்ணீர் குடிப்பேன். இதுவரை எனக்கு எந்தவொரு உடல்உபாதையும் ஏற்பட்டது கிடையாது. டாக்டரையும் சென்று பார்த்தது கிடையாது. நல்ல ஆரோக்கியத்துடனேயே உள்ளேன். மாலை வேளையில் மட்டும் மகள் வீட்டிற்கு சென்று ஏதாவது வாங்கி சாப்பிடுவேன். மற்றபடி பெரும்பாலும் எனக்கு உணவு மண் தான்.  விதம் விதமான உணவு பண்டங்கள் மீது எனக்கு எப்போதும் நாட்டம் இருந்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: