நெல்லை சந்திப்பு பகுதியில் எடக்கு மடக்காக நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி

நெல்லை : நெல்லை சந்திப்பு பகுதியில் இடைமறித்து நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு நகரங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் பல நகரங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகர பகுதியில் உள்ள வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.78 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்புதிய பஸ்நிலையத்தில் தரை தளத்தில் பஸ்நிறுத்தும் இடமும்,  கீழ் தளத்தில் வாகன நிறுத்தமும், 2வது தளத்தில் கடைகள், தங்கும் விடுதிகள், கழிப்பிட வசதிகளுடன் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

Advertising
Advertising

இதனால் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வரும் மாநகர பஸ்கள் பஸ்நிலையத்தின் எதிரில் மதுரை சாலையில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன. இதனால் எப்போது பார்த்தாலும் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் தனியார் பஸ்கள் போட்டி போட்டு போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்படுகின்றன. மாநகர பகுதிகளான பாளை, கேடிசி நகர், சாந்தி நகர், புதிய பஸ்நிலையம், மேலப்பாளையம், டவுன், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சந்திப்பு பஸ்நிலையம் பகுதிக்குவந்ததும் முந்தி செல்ல வேண்டி மதுரை சாலையை அடைத்து நிறுத்துவதால் பின்தொடரும் இருசக்கர வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. மேலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் இருந்து வெளியே செல்லும் பகுதிகளில் தனியார் பஸ்கள் இடைமறித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் தாழையூத்து பகுதியில் இருந்து சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் அப்பகுதியில் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி தினமும் ஏற்படுகிறது.

இதுபோல் பாளை, டவுன், மேலப்பாளையம் பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மதுரை சாலையில் வரிசை கட்டி நிற்பதால் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு செல்லும் தமு சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாலை நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் பரிதவிக்கின்றனர். இதனை ஒழுங்குபடுத்த முடியாமல் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் திணறி வருகின்றனர். எனவே நெல்லை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை ஏற்றிய பின் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பஸ்களுக்கு வழிவிடாமல் தனியார் பஸ்கள் போட்டி போட்டு இயக்குவது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: