ஹாங்காங்கில் போராட்டத்தின் போது சிசிடிவி கேமராக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 29 பேர் கைது

ஹாங்காங்: ஹாங்காங்கில் போராட்டத்தின் போது சிசிடிவி கேமராக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்குபவர்களை சீனாவிற்கு நாடுகடத்தி விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக ஹாங்காங் அரசு சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து போராட்டம் வலுக்கவே ஹாங்காங் தலைவர் கேரிலம்ப், சட்டத்திருத்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைத்தார். ஆனால் இந்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி அரசுக்கு எதிராகவும் ஹாங்காங்கில் ஜனநாயக போக்கு நிலவ வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்றிரவு தொழில் நிறுவனங்கள் நிறைந்த குவுன் டாங்  மாவட்டத்திலும் போராட்டகாரர்கள் காவலர்கள் மீது செங்கல் உள்ளிட்ட பொருட்களை வீசி போராட்டம் நடத்தி வந்தனர்.  சாலைகளில் தடுப்புகளை  அமைத்து அங்கிருந்த ஸ்மார்ட் விளக்கு கம்பத்தை சேதப்படுத்திய போராட்ட காரர்கள், கம்பத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை பெட்ரோல் குண்டு வீசி உடைத்தனர். இதனால் பதற்றம் நிலவவே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார், 10 பெண்கள் உள்பட 29 பேரை கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Hong Kong, petrol bomb, 29 people arrested
× RELATED ஹாங்காங்குக்கு புதிய இயக்குனர்: சீனா அதிரடி நடவடிக்கை