ஜம்மு-காஷ்மீரில் 10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை: ஆளுநர் சத்தியபால் மாலிக் பேட்டி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை என ஆளுநர் சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் 370ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததுடன், அதை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தகவல் தொடர்பு, தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி நிறுவனர் பரூக் அப்துல்லா, தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகிய 3 முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், காஷ்மீரில் உள்ள பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன. அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பிவந்ததால், மத்திய அரசு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அறிவித்தது. நிலைமை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து  தொலைபேசி சேவை சில இடங்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.  

ஸ்ரீநகரில் மட்டும் சில இடங்களில் கம்பி வேலிகள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.  அடையாள அட்டை சோதனை செய்யப்பட்ட பின்னர்  பொதுமக்கள் செல்ல  அனுமதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை அறிய சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழு ஸ்ரீநகரில் தடுத்து, டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் அரசியல் தலைவர்கள் இங்கு வருவது நல்லதல்ல. அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் காஷ்மீர் வந்த தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காக்கவும், காஷ்மீரில் அமைதி திரும்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியத்தாவது;  ஜம்மு-காஷ்மீர் 10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை.  தகவல் தொடர்பின்மை உயிரைக் காப்பாற்ற உதவினால், அதிலென்ன தீங்கு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இன்டர்நெட் சேவை, மொபைல் சேவையை நிறுத்தியது பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்களை காப்பாற்றுகிறது. கடந்த காலத்தில் காஷ்மீரில் ஏதாவது ஒரு நெருக்கடியான நிலை நேரிட்டாலே சுமார் 50 பேர் முதல்வாரத்திலே உயிரிழக்கும் சம்பவம் நேரிட்டது. இப்போது இந்திய அரசு மனித உயிர்களை இழக்க கூடாது என்ற அணுகு முறையை கையில் எடுத்துள்ளது. 10 நாட்களுக்கு செல்போன்கள் சேவை இல்லாமல் இருந்தால் மாநிலத்தில் மிக விரைவில் இயல்புநிலையை உறுதி செய்வோம் என்று சத்தியபால் மாலிக் கூறியுள்ளார்.

Related Stories: