×

அருப்புக்கோட்டையில் 6 மாதமாக பேவர் பிளாக் பதிக்கும் பணி இழுத்தடிப்பு: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரயில்வே பீடர் சாலையில் பேவர் பிளாக் பதிக்கும் பணி 6 மாதமாக இழுத்தடிக்கப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டையில் தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் பதித்தல் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு, ஐயுடிஎம் திட்டத்தில் ரூ.5 கோடி, டியுஆர்ஐபி திட்டத்தில் ரூ.3 கோடி நகராட்சி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நகரில் உள்ள ரயில்வே பீடர் ரோட்டில், இருபுறமும் சாலையை அகலப்படுத்தி, பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி நகராட்சி மூலம் தொடங்கப்பட்டது. ஆனால், பணி தொடங்கி 6 மாதமாகியும், அரைகுறையாக நிற்கிறது. சாலையின் இருபுறமும் ஜல்லிக்கற்கள் பரப்பி அப்படியே விட்டுள்ளனர். இந்த சாலை வழியாக போக்குவரத்து அதிகமாக உள்ளது. தற்போது சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் டூவீலரில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகனங்களுக்கு வழிவிடும்போது ஜல்லிக்கற்களில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து ஏற்படுகிறது.

கொட்டி வைக்கப்படும் கிரஷர் மண் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் பதம் பார்க்கிறது. மேலும், பாண்டியன் தெருவில் பொதுநிதி 8 லட்சம் ரூபாயில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு பணிகள் நடந்தது போக, பாக்கியுள்ள 2 லட்சம் ரூபாய்க்கு எஸ்எஸ்பி தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது ஆனால், இந்த தெருவில் சிமெண்ட் சாலை போடப்பட்டிருப்பதால் அதை பெயர்த்துவிட்டு பேவர் பிளாக் கற்கள் பதிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஒப்பந்ததாரர் அப்படி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். சிமெண்ட் சாலை மேல் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டால், வீடுகள் தாழ்வாகி, மழை காலங்களில் மழைநீர் வீடுகளுக்கு வரும் என தெரிவித்துள்ளனர். இதனால், ஒப்பந்ததாரர் தெருவை மறித்து பேவர் பிளாக் கற்களை அடுக்கி வைத்துள்ளரர்.

இதனால், போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். தெருவை மறைத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்களை அப்புறப்படுத்தவும், ரயில்வே பீடர் சாலையில் பேவர் பிளாக் பதிக்கும் பணியை விரைந்து முடிக்கவும், ஒப்பந்தகாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே, ‘நகராட்சி மூலம் ரூ.8 கோடியே 90 லட்சத்துக்கு நடக்கும் பணிகளுக்கு இதுவரை அரசிடமிருந்து நிதி வரவில்லை என்றும், இதனால், ஒப்பந்தகாரர்களுக்கு தொகை வழங்கப்படாததாலும், வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Tags : Beaver Black's, 6-month stay, Aruppukkottai
× RELATED ஜன.29ம் தேதி முதல் பிப். 6 வரை நடத்த...