காங்கிரசின் முக்கிய தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பாஜ-வில் சேர உள்ளாரா ? : காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பு

டெல்லி : காங்கிரசின் முக்கிய தலைவரும்   முன்னாள் அமைச்சருமான  ஜெய்ராம் ரமேஷ் , கர்நாடகாவைச் சேர்ந்த இவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர். இப்போது, ராஜ்யசபா, எம்.பி.,யாக உள்ளார். 65 வயதாகும் ஜெய்ராம், ஒரு காலத்தில், சோனியாவிற்கும், ராகுலுக்கும் மேடைப் பேச்சுகளை எழுதித் தந்தவர். மேலிடத்தோடு அவ்வளவு நெருக்கமாக இருந்த இவரை, இப்போது ஓரங்கட்டி விட்டனர்.

சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது, காங்கிரசுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. மோடி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்; கிராமத்து பெண்களுக்கு, சமையல் எரிவாயு அளிக்கும் திட்டம் உட்பட, பல நல்ல திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அதனால், அவரை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பதால், எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என, பேசியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

சமீப காலமாக, காங்கிரஸ் உட்பட, பல எதிர்க்கட்சிகளிலிருந்து, தலைவர்கள் பலர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். ஜெய்ராமும் அப்படி இணையப் போகிறாரா என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஜெய்ராம், இரு முறை பிரதமர் மோடியை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த சந்திப்பில், பிரதமரின் பல திட்டங்களை, ஜெய்ராம் மனம் திறந்து பாராட்டினாராம். இது, பா.ஜ., வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஜெய்ராம் தரப்பில், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. எதையும் மனம் திறந்து பேசக் கூடியவர் ஜெய்ராம்; அவர், மோடியை பாராட்டியதை வைத்து, பா.ஜ.,வில் சேர்ந்து விடுவார் என்பது தவறு என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள்.ஜெய்ராமை தொடர்ந்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், அபிஷேக் மனு சிங்வியும், மோடியை தனி நபர் விமர்சனம் செய்வதால், காங்கிரசுக்கு எந்த நன்மையும் இல்லை என, சொல்லியிருக்கிறார்.

இதனால், காங்கிரஸ் தலைமை நொந்து போயுள்ளது. இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசினால் தொண்டர்கள் குழம்பிவிடுவர் என, கட்சி கவலைப்படுகிறது. காங்கிரஸ், மோடியின் திட்டங்களைத் தான் குறை கூறுகிறது; தனிப்பட்ட நபரை விமர்சிக்கவில்லை எனக்கூறி, இந்த இருவரையும், கட்சி தலைமை எச்சரித்துள்ளது.

Related Stories: