மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!

டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி(66), மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு பலதுறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில் அவர் நேற்று மதியம் 12.07 மணியளவில் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, பாஜ தலைவர்கள், அமைச்சர்கள்,  மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர். பின்னர் அருண் ஜெட்லியின் உடல் பிரேத  பரிசோதனைக்கு பின்னர், எம்பார்மிங் செய்யப்பட்டு நேற்று மாலை டெல்லி  கைலாஷ் காலனியில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு பா.ஜ. உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின் அங்கிருந்து இறுதி சடங்குக்காக நிகாபோத் காட் பகுதிக்கு அருண் ஜெட்லி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். யமுனை நதிக் கரையை ஒட்டியுள்ள நிகாம்பாத் காட் ((nigambodh ghat)) மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: