×

கோவையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை: திசை மாறும் கல்லூரி மாணவர்கள்

கோவை: கோவையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனையால் கல்லூரி மாணவர்கள் திசை மாறி செல்கின்றனர். இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க வேண்டிய போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் சமீப காலமாக குறிச்சி பகுதி, மதுக்கரை, மேட்டுப்பாளையம், காரமடை, தென்னம்பாளையம் போன்ற இடங்களில் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கல்லூரி அதிகமாக இருக்கும் இடங்களில் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை பகுதியில் உள்ள புரோட்டா கடை ஒன்றில் சிகரெட்டில் கஞ்சாவை அடைத்து விற்பனை செய்தது மட்டுமல்லாமல் அதனை கல்லூரி மாணவிகள் ஒரு சிலர் வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரும்பாலான மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பதால் கண்காணிக்க யாரும் இல்லாததால் இது போன்று தடம் மாறி செல்கின்றனர். இதனை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவை ரயில் நிலையத்தில் பிடிபட்டார். அவரிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், கஞ்சாவை விற்பனை செய்வதற்காகவே அவர் வாட்ஸ் ஆப்பில் தனியாக குழு ஒன்றை ஆரம்பித்ததாகவும், அதில் கோவையை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கஞ்சா கிடைத்தவுடன் ‘‘ஏ ஒன் சரக்கு ரெடி, வாங்கிக்கோங்கோ’’ என்று வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார். அதனை போட்டி போட்டு கொண்டு கல்லூரி மாணவர்கள் வாங்கியுள்ளனர். அவர் தேனி, வருஷநாட்டில் ஒரு கிலோ ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி அதனை ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்திருந்தார். இது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மதுரையில் இருந்து கஞ்சா மொத்த வியாபாரிகள் பேருந்து மூலம் கோவைக்கு மூட்டைகளில் கஞ்சாவை கொண்டு வந்து கோவையில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்கின்றனர். அவர்களில் சில பெண் கஞ்சா மொத்த வியாபாரிகளும் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமார் கஞ்சா விற்க சொல்லி பெண் ஒருவரை வற்புறுத்தி கஞ்சா வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் மாமூல் வசூல் செய்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல் கோவை போலீசாரும் மதுரையில் இருந்து வரும் மொத்த கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கி கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் சட்ட விரோத செயல்கள் நடக்கிறது என்பது காவல் துறையினருக்கு நன்றாகவே தெரியும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து விட்டு போலீசார் எதிர்பார்க்கும் மாமூல் கிடைக்காமல் போனால் ஒழிய அதிரடி சோதனை என்ற பெயரில் தங்களுடைய பணியை செவ்வனே செய்வது போல் பாவனை செய்கின்றனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தால் எந்த வித இடையூறும் இன்றி அவர்கள் தங்களது வியாபாரத்தை தொடர முடியும் என்ற சூழ்நிலைதான் தற்போது தமிழகம் முழுவதும் நிகழ்கிறது’’. என்றார்.

Tags : Coimbatore, Cannabis Sales, College Students
× RELATED பண்டல், பண்டலாக கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது