×

மாநகராட்சி குடியிருப்பில் நீதிபதி வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்: 6 பேர் கும்பல் கைவரிசை

கோவை:  கோவையில், மாநகராட்சி குடியிருப்பு வளாகத்தில் உள்ள நீதிபதி வீட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து நகர் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் ரோடு மாநகராட்சி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கோவை மாநகராட்சி வரிவசூல் தீர்ப்பாய நீதிபதி நந்தினிதேவி வீட்டில், சுமார் 5 அடி உயரமுள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி சென்றுள்ளனர். முன்னதாக காரில் வந்த அவர்களில் 2 பேர்,

நீதிபதி வீட்டின் காவலாளி முத்துக்குமாரை கத்திமுனையில் மிரட்டி சத்தம் போடாமல் பிடித்து வைத்துக்கொண்டு மற்ற 4 பேர் வீட்டு வளாகத்தில் புகுந்து அங்கிருந்த சந்தன மரத்தை ரம்பத்தால் வெட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் சந்தன மரத்தை எடுத்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். காவலாளி அளித்த புகாரை தொடர்ந்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து சந்தன மரத்தை வெட்டி கடத்திய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கோவையில் தொடர்ந்து சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாத அச்சுறுத்தலை ெதாடர்ந்து நேற்று நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் கொள்ளையர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றிருப்பது போலீசாரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Tags : Cutting sandalwood, sandalwood, in the judge's house
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்