நாகூரில் செயல்படுத்தாமல் 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம்

* பயன்பாட்டிற்கு வருமா?
* பொதுமக்கள் எதி ர்பார்ப்பு

நாகை நகராட்சியின் 1 முதல் 36 வார்டுகள் உள்ளது. இதில் 1 முதல் 11 வார்டுகள் நாகூரில் உள்ளது. நாகை நகராட்சியில் பிரதனமான பகுதியாக நாகூர் உள்ளது. அதே நேரத்தில் நாகை நகராட்சிக்கு வருவாய் ஈட்டிதரும் பகுதியாகவும் நாகூர் விளங்குகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த நாகூர் பகுதியில் கடந்த 7 ஆண்டு காலமாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடபட்டுள்ளது வேதனை அளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம்  தேதி ரூ.49 கோடியே 43 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்பின்னர் திருத்திய மதிப்பீட்டின் படி 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி ரூ.79 கோடியே 31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு நகர்புற உள் கட்டமைப்பு நிதி நிறுவனம் 3ன் மூலம் உலக வங்கி நிதியுதவி பெறப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாகை நகராட்சி 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இடைநிலை மற்றும் உச்சகட்ட ஆண்டுகள் 2024 மற்றும் 2039 என்றும் அதன் மக்கள் தொகை முறையே 1  லட்சத்து 25ஆயிரத்த 895 மற்றும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 899 என்று கணக்கிடப்பட்டு பாதாள சாக்கடை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வீடுகளில் இருந்து பெறப்படும் கழிவு நீர் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு நூறு லிட்டர் என்ற அளவில் இடைக்கால மற்றும் உச்சகட்ட கழிவு நீர் அளவு நாள் ஒன்றுக்கு 12.39 மில்லியன் அளவு லிட்டர் மற்றும் 15.39 மில்லியன் லிட்டர் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு கழிவுநீர் சேகரித்தல் பணி 4 பகுதிகளாகவும், கழிவு நீர் சுத்திகரிப்பு பணிகள் 2 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நாகை, நாகூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அடங்கும். நகராட்சி முழுவதும் உள்ள 36 வார்டுகளில் கழிவுநீர் சேகரித்தல் பணிக்காக 3 ஆயிரத்து 249ஆள் நுழைவு தொட்டிகளும், 200 மில்லிமீட்டர் முதல் 600 மில்லி மீட்டர் வரையிலான விட்டுமுள்ள கழிவுநீர் குழாய்கள் 84 ஆயிரத்து 679 மீட்டர் நீளத்துக்கு பதிக்கபட்டுள்ளது. இதில் 2 பிரதான கழிவு நீர் உந்து நிலையம், 5 கழிவு உந்து நிலையம், 6 நீரேற்றி ஆழ்நுழைவு தொட்டிகள் மற்றும் 150 மில்லிமீட்டர் முதல் 600 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் 8 ஆயிரத்து 38 மீட்டர் நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது.

நாகை நகரில் பெறப்படும் கழிவு நீர் கோட்டை வாசல் பகுதியில் அமைந்துள்ள பிரதான நீர் உந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மின் மோட்டார் மூலம் நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் 9.63 எம்எல்டி முதல் 3.50 எம்எல்டி கழிவு நீர் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் நாகூர் நகர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இதுநாள் வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நாகூர் பகுதியில் உள்ள 1 முதல் 11 வார்டு வரை உள்ள வீடுகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாமல் கடந்த 7 ஆண்டு காலத்திற்கும் மேலாக கிடப்பில் உள்ளது. பாதாள சாக்கடை கிடப்பில் போடப்பட்டிருந்தாலும் நாகூரில்  உள்ள வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பிற்காக டெபாசிட் தொகை பெறப்படுகிறது. புதிதாக வீடு கட்டுவோர்கள் மற்றும் புதிதாக குடிநீர் இணைப்பு பெறுவோர்கள் பாதாள சாக்கடை இணைப்பிற்கு டெபாசிட் தொகை செலுத்தினால் தான் நகராட்சி சார்பில் உரிய சான்றிதழ்கள் தரப்படுகிறது. டெபாசிட் தொகை செலுத்தி பல ஆண்டு காலமாக பாதாள சாக்கடை இணைப்பு கிடைக்காமல் நாகூர் மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
* முகமது அப்துல்காதர்: நாகூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளவர்களுக்கு இதுவரை முடிந்துள்ள பணிக்கு உரிய பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனால் பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் ஓரளவு தொகை கொடுக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையம் 2.96 எம்எல்டி கொள்ளளவு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் நாகூர் பகுதியில் பாதாள சாக்கடை செயல்படாமல் உள்ளது எப்பொழுது பயன்பாட்டிற்குவரும் என்று தெரியவில்லை. செயல்பாட்டிற்கு வந்தால் மட்டுமே வீடுகளுக்கு இணைப்பு முழுமையாக கொடுக்க முடியும். நாகூரில் பணி தேங்கியுள்ளதால் நாகை நகராட்சியால் முழுமையாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாமல் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தினாலும் முழு பாதுகாப்போடு செயல்படுத்த வேண்டும். நாகையில் முழுமையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் கடந்த 16ம் தேதி பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய போது விஷ வாயு தாக்கி 2 ஒப்பந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர். மேலும் ஒருவர் விஷ வாயு தாக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் உரிய பாதுகாப்புடன் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

* முகமதுஷேக்தாவூது: நாகை மேலகோட்டைவாசல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நாகூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் நிறைவேற்றிய ஒப்பந்தகார்களுக்கு இதுவரை ரூ.2 கோடி நிலுவைதொகை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகையை பெற நீண்ட போராட்டம் நடத்தியும் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிலுவை தொகை வழங்கவில்லை. இதனால் ஒப்பந்தகாரர்களுக்கு நிலுவை தொகை வழங்கமுடியாமல் உள்ளது. குறிப்பிட்ட தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளதால் பணிகளை செய்து முடித்துவிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடிவைத்துள்ளனர். இதனால் நாகூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்நத நாகூர் நகரில் கழிவு நீர் திறந்தவெளியில் செல்கிறது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த நகருக்கு இப்படி திறந்த வெளியில் கழிவு நீர் செல்வது சரியில்லை. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் நாகூர் நகரில் பாதாள சாக்கடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

*  ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர்: நாகூர் நகரில் இதுவரை 250 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விண்ணப்பம் செய்வோர்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. டெபாசிட் தொகை பெறப்பட்டவர்களில் 50 சதவிதம் பேரின் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் நாகூர் நகரில் பாதாள சாக்கடை முழு செயல்பாட்டிற்கு வந்து விடும் என்றார்.

Tags : Nagore, sewer project
× RELATED இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு...