தொழில் வளத்திற்கு ஏங்கும் தர்மபுரி: ஆய்வோடு மட்டுமே நிற்கும் ராணுவ ஆராய்ச்சி மையம்

* 4,500 கோடி திட்ட அறிவிப்பு ‘புஸ்’
* கவனம் செலுத்துமா மத்திய அரசு?

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ரூ4,500 ேகாடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட ராணுவ தளவாட பொருட்கள் ஆராய்ச்சி மைய திட்டம் எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது தர்மபுரி. அங்குள்ள மக்களின் கடின உழைப்பால் இந்த மாவட்டம் சமீபகாலமாக கவனம் ஈர்த்து வருகிறது. காவிரி, இந்த மாவட்டத்தில்  கரைபுரண்டு ஓடினாலும் இவர்களுக்கு குடிப்பதற்கு கிடைக்கவில்லை. நீண்ட ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், நீரை பருக ஆரம்பித்தனர். இங்குள்ள மாணவர்கள் கல்வியில் பெரிய அளவில் சாதனைகள் படைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் எந்த ெபரிய தொழிற்சாலையும் இங்கு இல்லை. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்  மட்டுமே உள்ளது.

எனவே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில்  கடந்த 2010-11ம் ஆண்டு அப்போதைய தர்மபுரி திமுக நாடாளுமன்ற  உறுப்பினர், தாமரைச்செல்வன் ராணுவ ஆராய்ச்சி மையம் தர்மபுரி மாவட்டத்தில்  அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நல்லம்பள்ளி  ஒன்றியம் நெக்குந்தியில் ரூ4500 கோடியில் ராணுவ ஆராய்ச்சி மையம்  அமைக்கப்பட உள்ளதாக கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மத்திய பாதுகாப்புதுறை  அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்தார். இதை தொடர்ந்து ராணுவ ஆராய்ச்சி  மையத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி  நிறுவனத்தின் ஆய்வு குழுவினர் தர்மபுரிக்கு நேரில் வந்து நல்லம்பள்ளி  ஒன்றியம் எர்ரபையன ஊராட்சிக்குட்பட்ட நெக்குந்தியில் சுமார் 900 ஏக்கர்  நிலத்தை ஆய்வு செய்து இடத்தை தேர்வு செய்தனர்.

இதையடுத்து இடத்திற்கான அனுமதி,  நிலம் கையகப்படுத்தல், ஆர்ஜிதப்பணிகள் உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடந்தது.  அதன்பின்னர், இந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இன்னும் சில மாதங்களில் தர்மபுரியில்  ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கான கட்டுமானப்பணிகள் துவங்கும் என்று அதிகாரிகள் கூறிவந்தனர்.  ஆனாலும் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை. பாமக எம்பி அன்புமணி ராமதாசும்  நாடாளுமன்றத்தில் ராணுவ ஆராய்ச்சி மையப்பணிகள் தொடங்க வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் ராணுவ பாதுகாப்பு  துறையில் இருந்து மத்திய குழுவினர் ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கு தேர்வு  செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

இந்த ராணுவ  ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். இதையொட்டி சிறு  தொழில்கள் வளர்ச்சி பெறும். நில மதிப்பு மேலும் உயரும். தர்மபுரி  மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். வேலை தேடி  வெளிமாநிலத்திற்கு செல்வது குறையும். உள்ளூரில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.  எனவே  கிடப்பில் கிடைக்கும் ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கான பணியை உடனே தொடங்க  வேண்டும் என்பது ஒட்டுமொத்த தர்மபுரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கண்டிப்பாக திட்டம் செயல்பாட்டுக்கு வரும் அதிகாரிகள் நம்பிக்கை
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கான நிலத்தை ராணுவ அமைச்சகத்திடம் நாங்கள் ஒப்படைத்து விட்டோம். அவர்கள் அதற்குரிய தொகையையும் மாவட்ட நிர்வாகத்திற்கு செலுத்திவிட்டனர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த தொழிற்சாலை என்பதால், அதன் அமைப்பு குறித்தோ, அமையப்போகும் விபரங்கள் குறித்தோ, வெளிப்படையாக எதையும் கூற முடியாது. ஆனால் கண்டிப்பாக இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த பணிகள் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது,’’ என்றனர்.

அரசியல் கலக்காமல் செயல்படுத்த வேண்டும் முன்னாள் எம்பி ஆதங்கம்
முன்னாள் எம்பி தாமரைசெல்வன் கூறுகையில், ‘‘தர்மபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். தர்மபுரி மாவட்டத்தில்  ராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என பலமுறை நாடாளுமன்ற  கூட்டத்தில் பேசினேன். இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர்  ஏ.கே.அந்தோணியிடம் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் கொடுத்தேன். இதன்  அடிப்படையில் பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, தர்மபுரியில் ₹4,500 கோடி மதிப்பில் ராணுவ ஆராய்ச்சி மையம்  அமைக்கப்படும் என அறிவித்து எனக்கு கடிதம் அனுப்பினார். இதைதொடர்ந்து ராணுவ  ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன நிபுணர்கள் குழு நேரில் வந்து  நெற்குந்தியில் 900 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து  அனுமதியளித்துள்ளது. நில ஆர்ஜிதம் மற்றும் அது தொடர்பான பூர்வாங்க  பணிகள் நடந்தது. அதன்பின்னர் கிடப்பில் போட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக கிடப்பில் போடப்பட்டது என்பது குறித்து இன்றுவரை தற்போதைய மத்திய அரசிடமிருந்து விளக்கம் பெற முடியவில்லை. இந்த திட்டத்தை பொறுத்தவரை அரசியல் கலக்காமல், மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும்,’’ என்றார்.

நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்: சிட்டிங் எம்பி உறுதி

தற்போதைய தர்மபுரி எம்பி டாக்டர்  செந்தில்குமார் கூறுகையில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம்  நெக்குந்தியில் ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கான இடத்தில் பணிகளை தொடங்க  வேண்டும் என்று மத்திய பாதுகாப்புதுறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை  வைத்தேன். ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ராணுவ  பாதுகாப்பு துறை பெயரில் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. விரைவில் பணிகள்  தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரை நமது மாவட்டத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன்,’’ என்றார்.

வேைலவாய்ப்பில் உள்ளூருக்கு முன்னுரிமை தொழிலதிபர் கோரிக்கை
தொழிலதிபர் செல்வராஜ் கூறுகையில், ‘‘ஆண்டு தோறும் பிளஸ்2வில் அதிக மதிப்பெண் எடுத்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளூரில் எந்த தொழிற்சாலைகளும் இல்லை. ராணுவ ஆராய்ச்சி மையம் இங்கு அமையும் ேபாது, அதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதில் மிக முக்கியமாக திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும். அதே போல் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உள்ளூர் மக்களுக்கே உருவாக்கித்தர வேண்டும். குறிப்பாக வடமாநிலத்தவர்களை தவிர்த்து, தமிழக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ராணுவ ஆராய்ச்சி மையத்தின் வேலை வாய்ப்புகள் இருக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Business Resources, Dharmapuri,
× RELATED பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு