புதுவையில் பல்வேறு அரசு துறைகளில் 9 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாத அவலம்: நிர்வாகத்தில் தடுமாற்றம்.. வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உள்ளது. இங்கு பணியாளர் தேர்வு ஆணையம் கிடையாது. இதனால் புதுவைக்கான குரூப்-ஏ போன்ற உயர் பணியிடங்கள் டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகிறது. புதுச்சேரியை பொறுத்தவரை 38 அரசுத்துறைகள் உள்ளன. இந்த துறைகளுக்கான உயர் பதவிகள் போக, மீதியுள்ள குரூப் சி, டி போன்ற பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்றால், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். பின்னர், பணி நியமன விதிகள் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு நடத்தி காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. புதுவையில் மொத்தமுள்ள 37,929 பணியிடங்களில், தற்போது 28 ஆயிரத்து 839 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

மீதியுள்ள 9,090 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இதனால் அரசுத் துறைகளின் நிர்வாகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்ற சேவை துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதால், பொதுமக்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்துவது, மருத்துவமனையில் டாக்டர், செவிலியர் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. புதுச்சேரியில் பள்ளி கல்வித்துறையில் மட்டும் அதிகபட்சமாக ஆசிரியர், விரிவுரையாளர், ஊழியர் என 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கு அடுத்தப்படியாக, பொதுப்பணித்துறையில் 1,100, சுகாதாரத்துறையில் 600, மின்துறையில் 400, உயர்கல்வித்துறையில் 200, குடிமை பொருள் வழங்கல் துறையில் 20 பணியிடங்கள் என ஒவ்வொரு துறையிலும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், பிசிஎஸ் அதிகாரிகளுக்கான பதவியில் 30 இடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. இதனால் பல அதிகாரிகள் கூடுதலாக இதர பணியையும் கவனித்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 7,600 பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் சொற்ப ஊதியத்துக்கு குறைவான பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் பாலசேவிகா - 180, கம்ப்யூட்டர் பயிற்சியாளர் - 18, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் - 64, விரிவுரையாளர் - 45, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் - 8 என மொத்தம் 315 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை எழுத்து தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. அதேபோல் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 50 செவிலியர்கள், 123 வார்டு அட்டெண்டர் பணியிடங்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் குறைந்த ஊதியத்துக்கு நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது. இதற்கிடையே கடந்தாண்டு 390 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஓராண்டாகியும் இதுவரை எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, `1967ல் போடப்பட்ட பணி நியமன விதிப்படி தான் காலியிடங்களை நிரப்ப வேண்டும், விதிகளை மீறக்கூடாது என தலைமை செயலர் கூறுவதாகவும், அதன்படி ஆட்களை தேர்வு செய்தால் கடைசி வரை எவ்வித பதவி உயர்வு இன்றிதான் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த விதிகளை மாற்ற அரசும் முயற்சி எடுக்கவில்லை. ஒருசில துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அரசு கோப்பு அனுப்பினாலும், அதற்கு தலைமை செயலர் அனுமதி அளிப்பதில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது’ என்றனர்.

புதுவையில் பல்வேறு அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கில் காலியிடங்கள் இருந்தும், அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்காததால் படித்த இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் பணி நியமன விதிகளை மாற்றி அனைத்து பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் 9,090 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் அந்தந்த துறை நிர்வாகத்தில் தடுமாற்றம் ஏற்படுவதுடன் பட்டதாரி இளைஞர்களின் அரசு பணிக்கான கனவும் எட்டாக்கனியாக மாறியுள்ளது.

சேவை துறை சார்ந்த பணியிடங்கள் கூட நிரப்பவில்லை

அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், `புதுவையில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், பொதுப்பணி போன்ற சேவை துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் கூட இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. இது ஆட்சியாளர்களின் செயல்பாட்டு தன்மைக்கு ஒரு சான்று. ஏற்கனவே அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 9 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அதற்கான நிதியும் அரசுக்கு கிடைக்கிறது. இந்த நிலையிலும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை. அரசு நிறுவனங்களில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் வேலை செய்தால் அந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சட்டம். ஆனால், இங்கு 10, 15 ஆண்டுகள் பணி புரிந்தவர்களை கூட நிரந்தரம் செய்யவில்லை. அவர்களுக்கான சம்பளத்தை பெற போராடி வருகின்றனர். தலைமை செயலர் மற்ற பணியிடங்களை நிரப்ப ரூல்ஸ் பேசுகிறார். ஆனால், கவர்னர் மாளிகையில் சட்டத்துக்கு விரோதமாக 4 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு அப்படி அவர் அனுமதி கொடுத்தார்’ என்றார்.

2.38 லட்சம் பேருக்கு வேலையில்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், அரசு துறைகளில் ஒரு மாதத்துக்கு 200 பேர் வீதம் ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்று வருகின்றனர். இந்த அரசாங்கம் காலி பணியிடங்களை நிரப்பவில்லை. ஒரு வேலை வாய்ப்பை கூட உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் 2.38 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலையின்றி இருக்கின்றனர். இதை பற்றி ஆட்சியாளர்கள் கலைப்படவில்லை. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. புதுச்சேரியில் 17 ஐஏஎஸ் அதிகாரி இருந்தும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி முயற்சி எடுக்கவில்லை. தற்போது சமூக குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமே வேலையின்மைதான். எனவே, புதுவை அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்றார்.

Related Stories: