×

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலட்சியத்தால் மலைக்கோட்டையில் நட்ட ரூ.50 லட்சம் மரக்கன்றுகள் நாசம்

* பராமரிப்பின்றி மண்ணோடு மண்ணாகிய அவலம்
* தொன்மையை பாதுகாக்காத தொல்லியல் துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையை மேலும் பசுமையாக்க ரூ.50 லட்சத்தில் மரக்கன்றுகள் நட்டு வனத்துறையினர் வீணாக்கியுள்ளனர். மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மலைக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 360 அடி உயரம், 400 மீட்டர் நீளம், 300 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளது. நீர் சுனைகள், விஜயநகர பேரரசின் சிற்பக்கலையை உணர்த்தும் சிற்பங்கள், தூண்கள், கோயில், பாதாள சிறைகள், கண்காணிப்பு கோபுரங்கள் என பல வரலாற்று நினைவுகளை கொண்டுள்ளது.  வனததுறையால் இங்குள்ள பாறைகளில் 2,700 மரக்கன்றுகள் ரூ.50 லட்சம் செலவில் நடப்பட்டன. இவற்றை டின்களில் மண்ணை போட்டு அதில் வைத்து நட்டு வைத்தனர். கடந்தாண்டு திடீரென வீசிய கஜா புயலால் ரூ.50 லட்சம் மரக்கன்றுகள் வீணாகியுள்ளது.

வரலாற்றில் முத்திரை:
இந்த கோட்டையை கைப்பற்றிய திப்பு சுல்தான், இங்கு ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆயுதங்களையும், வீரர்களையும் தங்கும் இடமாக மலைக்கோட்டையை மாற்றினார். பின்பு அடைக்கலம் கேட்ட சிவகங்கை வேலுநாச்சியாருக்கு வெள்ளையர்களை எதிர்த்து போராடுவதற்கு குதிரை படைகள் மற்றும் வீரர்களை அனுப்பி வைத்தார் என்பது வரலாறு. இந்த போராட்டம் கடந்த 1884ம் ஆண்டுக்கு முன்பே சிப்பாய் கலகம் துவங்குவதற்கு முன்பே நடந்துள்ளது. இதற்கு திண்டுக்கல் பிளான் என்று பெயரிடப்பட்டது. அப்போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளும் இந்த மலைக்கோட்டையில் உள்ளது. இந்த கோட்டை தொல்லியல்துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

கட்டணம் வசூல்:
மலைக்கோட்டையை சுற்றி பார்ப்பதற்கு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளகு–்கு கட்டணம் கிடையாது. பெரியவர்களுக்கு ரூ.25, வெளிநாட்டினருக்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது. கொடைக்கானல், பழநிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பார்க்க அதிகளவு வருகின்றனர்.

வசதிகள் இல்லை:
திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் பயணிகள் பயன்படுத்தும் அடிப்படை வசதியான கழிப்பறை, குடிநீர் எதுவும் இல்லை. வெயில் நேரத்தில் படிக்கட்டுக்களில் நடக்க முடியாது. மலைக்கோட்டையில் ஒதுங்குவதற்கு மரங்கள் இல்லை. குடிநீர் வேண்டும் என்றால் மலைக்கோட்டை படியேறும் முன்பு கடையில் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

முதியவர்கள் சிரமம்:
செங்குத்தான பாறையில் நடந்து செல்வதற்கு கைப்பிடிகள், பிடிமானத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டவில்லை. இதனால் சுற்றுலா வரும் குழந்தைகள், முதியவர்கள் ஏற முடியாமல் தவிக்கின்றனர். வெயில் நேரத்தில் குழந்தைகளுடன் வருபவர்களும், முதியவர்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சுற்றுலாவை மேம்படுத்தும் முன்பு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

இப்படி செய்ததுக்கு அப்படி செய்திருக்கலாம்
இதுகுறித்து திண்டுக்கல் பயணி எஸ்.ரமேஷ் கூறியதாவது, ‘மலைக்கோட்டையில் ரூ.50 லட்சத்திற்கு மரக்கன்றுகள் நடுவதாக கூறி வீணாக்கியதற்கு, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றி இருந்தால் கன்றுகள் ஓராண்டில் மரமாக வளர்ந்து இருக்கும். மலையேறும் சுற்றுலாப்பயணிகள் திணற வேண்டியுள்ளது. மலையில் ஒதுக்குவதற்கு கூட இடம் இல்லை. குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகிறோம். புராதான சின்னங்கள் பல சிதைந்தும், உடைந்தும் கிடக்கின்றன. இவற்றை தொல்லியல்துறையினர் கவனிப்பதில்லை. மேலும் பயணிகள் பல இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்துவதால், துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள புராதான சின்னங்களை மராமத்து செய்து பாதுகாத்தால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மலைக்கோட்டைக்கு வருவார்கள்’’, என்றார்.

Tags : Dindigul, forest department negligence, hill fortress, saplings
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...