தமிழகத்தின் நெற்களஞ்சியம் தழைக்க பொங்கி வரும் காவிரியை தடுத்து கரைசேர்க்கும் மேட்டூர் அணை: வரலாற்று நினைவுகளில் மூழ்கும் விவசாயிகள்

ேசலம்: ‘மேட்டூர் அணை’ இது தமிழகத்தின் பசியாற்றி, பசுமைக்கு வித்திடும் நீர்ப்பொக்கிஷம். பொங்கி வரும் காவேரியை ேசமித்து வைத்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கு அனுப்பும் அற்புதம். வறண்ட அணையாக சில ேநரங்களில் நம்மை போராடச் செய்திருக்கிறது. ஆர்ப்பரிக்கும் நீரால் பல நேரங்களில் ஆனந்தக்கூத்தாட வைத்திருக்கிறது. பயிர்களுக்கு உயிரூட்டும் இந்த அட்சய பாத்திரம், இன்னும் சில நாட்களில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் நீர்வள ஆர்வலர்கள். இந்த நேரத்தில் இந்த மேட்டூர் அணை தோன்றிய வரலாற்றின் சுவாரஸ்யங்களில் நெகிழ்கின்றனர் மூத்தவிவசாயிகள். குடகு மலையில் பொங்கிப் பிரவாகம் எடுத்த காவிரி, அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் அசுர பாய்ச்சலில் நுழைந்து, கரிகாலன் கட்டிய கல்லணையை கடந்து பயிர்களை துவம்சம் செய்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் காவிரியின் குறுக்ேக ஒரு அணையை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அன்றைய தஞ்சை சீமை விவசாயிகள். 1801 பிரிட்டீஷ் கிழக்கிந்திய சபை அதிகாரியாக இருந்த சர்ஆர்தர்காட்டன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். மைசூர் சமஸ்தானத்தின் எதிர்ப்பால்  இம்முயற்சி கைவிடப்பட்டது. 1835ல் நடந்த முயற்சிகளும் முடங்கியது.

இப்படி மைசூர் அரசிடம் நடந்த பல்வேறு கட்டப்  பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892ஆம் ஆண்டு முதன்முதலாக ஓர் ஒப்பந்தம்  ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி,  சாம்பள்ளியில் சென்னை மாகாண அரசு ஓர் அணையைக் கட்டுவதற்கும், மைசூர் அரசு  கண்ணம்பாடியில், காவிரியின் குறுக்கே ஓர் அணை கட்டுவதற்கும் அனுமதி  கிடைத்தது. மைசூர் சமஸ்தானம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டும் அணை குறித்த  முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று அணை கட்ட  வேண்டும் என்று முடிவானது. இதன்படி, சென்னை மாகாண அரசு அணை  கட்டுவது குறித்த திட்ட ஆய்வுப் பணியானது 1905ல் துவங்கி 1910வரை நடந்தது.  இப்போது உள்ள மேட்டூருக்குச் சற்றுத் தெற்கிலுள்ள செக்கானூர் பால  மலைக்கும், கிழக்கே கோணநாயக்கன்பட்டி என்ற ஊருக்கு அருகிலுள்ள வனவாசி  மலைக்கும் இடையே அணை கட்ட ஆங்கிலேயப் பொறியாளர்கள் முடிவுசெய்தனர். அந்த  அணையில் இப்போது உள்ளதைக் காட்டிலும் கூடுதலான நீரைச் சேமிக்க  முடிந்தாலும் அதில், ஆபத்து அதிகம் இருப்பதாகக் கருதி, இறுதியில் அதைக்  கைவிட்டுவிட்டு, ஆர்தர் காட்டன் திட்டமிட்டிருந்த சாம்பள்ளியிலேயே  (மேட்டூரில்) அணை கட்ட முடிவு செய்தனர்.

இதே நேரத்தில், 1910இல்  மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டிஎம்சி நீரைத் தாங்கும்  கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது,  சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் மீண்டும் சிக்கல்  எழுந்தது. இந்நிலையில் பல்வேறு உத்தரவாதங்களுக்கு பிறகு, 1923ல் திருவாங்கூர் சமஸ்தனத்திற்குட்பட்டிருந்த திவான் பகதூர்  சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்பவரின் முயற்சியால் 1924ம் ஆண்டு, அப்போதைய மைசூர்   அரசாங்கத்திற்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில், மேட்டூர் அணையின் கட்டுமானப் பணி   1925ம் ஆண்டு ஜூலை 20ம்தேதி தொடங்கி, 1934ம் ஆண்டு, ஆகஸ்ட் 21ம் தேதி  முடிவுற்றது. மேட்டூர் அணையை அப்போதைய சென்னை  மாகாணத்தின் ஆளுநர்,  ஜார்ஜ் பிரிட்டரிக் ஸ்டான்லி திறந்து வைத்தார்.  அவருடைய நினைவாக, மேட்டூர்  அணை, ஸ்டான்லி நீர்த்தேக்கம்  என்றே அழைக்கப்படுகிறது.

33 கிராமங்களை  அடக்கியஅணை
மேட்டூர் அணையானது நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி,  பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைத்து  கட்டப்பட்ட அணையாகும். கிபி 10ஆம் நுற்றாண்டில் சோழ மன்னர் ஆட்சியில்  கட்டப்பட்ட நந்தி முகப்பும், அதற்க்குபின் கருவறை அமைந்துள்ள ஜலகண்டீஸ்வரர்  கோயிலும், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இரட்டைகோபுர கிறிஸ்தவ  ஆலயமும் இன்றும் அடையாள சின்னங்களாய் அணையின் நடுவில் உள்ளது. அணையின்நீர்மட்டம் 80அடிக்கு கீழ் குறைந்தால் நந்தி சிலையும்,  70 அடிக்கு கீழே குறையும்போது கிறிஸ்தவ கோபுரமும் தெரியும். 1934 ஆம் ஆண்டில் முதன் முறையாய்  ஸ்டான்லி நீர் தேக்கம் நீரில் நிறைந்தது. நீர்இருந்தாலும், குறைந்தாலும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதோடு சிதைந்த, காலத்தின்  அழியா நினைவு சின்னங்களையும் தன்னுள் அடக்கிநின்று மண்ணின் பெருமை பேசுகிறது மேட்டுர் நீர்த்தேக்கம்.

10ஆயிரம் தொழிலாளர் உழைப்பில் உருவானது
10ஆயிரம் பணியாளர்களை கொண்டு 9ஆண்டு கால  உழைப்பில் சுண்ணாம்பு, காரையில் கட்டிமுடிக்கபட்ட மேட்டூர் அணையின் மொத்த நீளம் 5300 அடி. அதிகபட்ச உயரம் 214 அடி. அதிகபட்ச அகலம் 171 அடி. அணையின்  சேமிப்பு உயரம் 120 அடி. மேட்டூர் அணையில் 59.25 சதுர மைல்  பரப்பளவில் நீர்தேக்கி வைக்கப்படுகிறது. அப்போதைய நிலையில் இந்த அணையைக் கட்டுவதற்கு ஏற்பட்ட  செலவு  ₹4.80 கோடியாகும். 16கண் மதகுகள் கொண்ட இந்த அணையில் இரண்டு சுரங்க மின்நிலையங்கள்  உள்ளது. இவற்றில் முதல் மின்நிலையம் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்திலும்,  இரண்டாம் மின்நிலையம் இந்திய குடியரசு ஆட்சியிலும் கட்டப்பட்டது.

வர்த்தக நகரமாக இருந்த காவேரிபுரம்
சேலம் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் மைசூர் மாநிலத்தின் எல்லையிலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது மேட்டூர் அணை. காவிரிபுரம் என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக்கும் ஊர்களிலேயே பெரிய ஊராகும். 1801இல் இப்பகுதிக்கு நடைப்பயணமாக வந்து, ஆய்வு செய்த டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் என்பவர், காவிரிபுரத்தில் 6,500 பேர் வாழ்ந்ததாகத் தனது பயண விவர  நூலில் குறிப்பிட்டுள்ளார். மைசூர் நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையில் முக்கியமான வணிக நகராக காவிரிபுரம் இருந்ததாகவும், காவிரி ஆற்றின் வலது கரையில் சோழப்பாடி என்ற ஒரு ஊர் இருந்ததாகவும், இந்த ஊரில், ஆங்கில அரசின் கோட்டையும், ராணுவமும், அந்தப் பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்யும் வணிகச் சந்தையும் புகழ்பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Cauvery, Mettur Dam, Farmers
× RELATED காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை...