மதுரையில் தொடரும் பழிக்குப்பழி சம்பவங்கள் போஸ்டர் ஒட்டி அறிவிப்பு செய்து 8 கொலைகள் அரங்கேற்றம்: மக்கள் அதிர்ச்சி

மதுரை: மதுரையில் சமூக ஊடகங்களிலும், போஸ்டர்களிலும் பழிக்குப்பழி வாங்குவதாக அறிவிப்பு செய்து, கொலை சம்பவங்களை அரங்கேற்றி வரும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை 8 பேர் கொலையானது தெரிய வந்துள்ளது.
மதுரை புதூர் ராமவர்மா நகரைச் சேர்ந்த பைனான்சியர் ராஜா(35). கடந்த ஆக.21ம் தேதி நள்ளிரவில் ஓட ஓட விரட்டி, கும்பலால் வாள், கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவத்தின் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்திற்கு முன்னதாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களிலும், போஸ்டர்களிலும் பழிக்குப்பழி வாங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘மதுரை புதூரில் இருதரப்பினர் சேவல் சண்டைக்கென சேவல் வளர்த்து வந்துள்ளனர். இதில் ஒரு தரப்பினரின் சேவலை கழுத்தறுத்து ஒருவரை கொன்றது தெரிந்து, அந்த வாலிபரை கொடைக்கானல் அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் சென்று, வாடிப்பட்டி அருகே கும்பல் வெட்டிக் கொன்றது. இதில் துவங்கிய பகை அடுத்தடுத்து இருதரப்பிலும் பழிக்குப்பழி கொலையாக மாறி விட்டது. கார்த்தி, தர் என இரு கும்பலாகப் பிரிந்து இந்த கொலைகளை அரங்கேற்றி உள்ளனர். தொடர் கொலை சம்பவங்களால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும், புதூர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியும் கும்பல் முன்னதாகவே கொலைக்கான எச்சரிக்கை விடுத்து, பிறகே கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. ‘பாய்ஸ்’, ‘நந்தாபாய்ஸ்’, ‘காட்டுராஜா பாய்ஸ்’ என அடைமொழிகளுடனான போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களிலும் ‘நோ ஆர்க்யூமென்ட், ஒன்லி ஜட்ஜ்மென்ட்’ என்றும், ‘உரக்கச் சொல்வோம் உலகுக்கு... ஈடு செய்வோம் உங்கள் இறப்புக்கு’ போன்ற வாசகங்களுடன் பழிக்குப்பழி வாங்கும் உணர்வை இந்த போஸ்டர்கள் மூலம் விதைத்துள்ளனர். கார்த்தி தரப்பில் 6 பேர், தர் தரப்பில் 2 பேர் என இதுவரை 8 பேர் கொலையாகி இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் இந்த கொலைகள் நடந்துள்ளது’’ என்றனர். புதூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘மதுரை புதூரில் உள்ள ராமவர்மா நகர், மண்மலைமேடு, காந்திபுரம், ஜவகர்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே மாறி, மாறி பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறோம். இதுதவிர, கொலையானவர்களின் ஆண்டு நினைவு போஸ்டர்களை தொடர்ந்து கும்பல் சுவர்களில் ஒட்டுவதும், நினைவுக் கூட்டங்கள் நடத்துவதுமாக இருக்கிறது. தனி போலீஸ் படை அமைத்து, இக்கும்பலை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Madurai, nemesis incident, stage
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...