சீர்காழி பகுதியில் தொடர் மழையால் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தது: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

சீர்காழி: சீர்காழி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் எருக்கூர், புத்தூர், மாதிரவேளுர், வடரெங்கம், எடமணல், மாதானம், விநாயகக்குடி, வடகால், நல்லநாயகபுரம், நல்லூர், ஆச்சாள்புரம், கொள்ளிடம், செம்மங்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி, கன்னியாக்குடி, கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பம்பு செட் நீரை பயன்படுத்தி சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தனர். தற்போது சாகுபடி செய்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக வளர்ந்துள்ளது.

இந்நிலையில் நெற்கதிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டன. மேலும் மழைநீர் வயலில் தேங்கியதால் அறுவடை பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழை நீடித்தால் வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் முளைத்து விடும். இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மழையால் சாய்ந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: