×

ஏற்காடு ஏரிக்கரையையொட்டி போர்வெல் அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

ஏற்காடு:ஏற்காட்டில் ஏரிக்கரையை ஒட்டி தனியார் தங்கும் விடுதியினர் போர்வெல் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காடு டவுனில் அலங்கார ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி ஆகாயத்தாமரைகளால் நிரம்பி, தூர்ந்து போயிருந்தது. இதை கடந்த 2017ம் ஆண்டு ஏற்காடு பகுதி இளைஞர்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர். இந்த ஏரியில் இருந்து ஏற்காடு டவுன், கடைவீதி, பஸ்நிலைய அரசு கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த மாதங்களில் ஏற்காட்டில் குடிநீர் பஞ்சம் நிலவி வந்ததையடுத்து, கடந்த ஜூன் 1ம் தேதியன்று ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில், தனியாருக்கு சொந்தமான கிணறு  மற்றும் போர்வெல்களில் இருந்து தண்ணீர் எடுக்க பிடிஓ ராமசந்தர் தடை விதித்து, அங்கு தண்ணீர் எடுக்க பயன்படுத்திய மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்தார்.

தற்போது ஏரிக்கரையில், ஏற்காடு ஒன்றிய நிர்வாகம் சார்பில் கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 27ம் தேதி அலங்கார ஏரி கரையை ஒட்டி உள்ள தனியார் தங்கும் விடுதியினர் போர்வெல் அமைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏரிக்கரையில் இருந்து 100 மீட்டருக்குள் போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பொதுமக்களை சமாதானப்படுத்தி தாசில்தார் மற்றும் பிடிஓ முன்னிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அன்றிரவு போர்வெல் அமைக்கப்படாது என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில், சேலம் ரூரல் டிஎஸ்பி உமாசங்கர், ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் போர்வெல் அமைக்கும் பணியை தனியார் தங்கும் விடுதியினர் துவக்கினர். அப்போது மீன்டும் ஏற்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்து ஏரிக்கரையில் போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது டிஎஸ்பி உமாசங்கர், தங்கும் விடுதி உரிமையாளர் ஏற்கெனவே அமைக்கப்பட்ட போர்வெல்லை சீரமைத்து ஆழப்படுத்த அரசு அனுமதி வாங்கியுள்ளார். எனவே, போர்வெல் அமைப்பதை தடுக்கக்கூடாது என கூறினார். இதனால், போர்வெல் அமைப்பதை தடுக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Yercaud Lake, Borewell
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்