×

முத்துப்பேட்டை அருகே ஆற்றை தூர்வாராததால் பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் முற்றுகை: தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே ஆற்றை தூர் வாராததால் பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் தூர் வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தின் வழியாக செல்லும் கிளை தாங்கி ஆறு பல வருடங்களாக தூர்வாராமல் தூர்ந்து மேடுதட்டி காணப்பட்டதுடன் ஆற்றின் நெடுவெங்கும் ஆகாயத்தாமரை செடிகள் கருவை முற்கள் மண்டி கிடந்தது. இதனை இப்பகுதி விவசாயிகள் தூர்வாரி தரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து தினகரனிலும் செய்தி வெளியாகினது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் தற்பொழுது இந்த கிளைதாங்கி ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மதுரையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து தூர்வாரும் பணியை செய்து வருகிறார். இதில் நடுவே தூர் வரும் பணியை செய்யாமல் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆற்றின் இரு கரையும் படுகையில் உள்ள மண்ணை எடுத்து கரையை உயர்த்தி கட்டி வந்தனர். இதனால் ஆற்றின் நடுவே வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் உள்ள வெங்காயத்தாமரை செடிகள் படர்ந்த நிலையில் அப்படியே உள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி விவசாயிகள், ஆற்றை முறையாக தூர்வரவேண்டும் என கோரி சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் இயந்திரத்தை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பொறியாளர்கள் தொலைபேசியில் உடன் விவசாயிகளிடம் தொடர்பு கொண்டு பணியை செய்ய ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் மறுப்பு தெரிவித்த விவசாயிகள் தற்பொழுது ஆற்றில் தண்ணீர் வரபோகிறது. இந்த பணியை கோடை காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் முறையாக தூர்வார முடியும். தரமானதாகவும் இருக்கும். பணியை நிறுத்தி கோடை காலத்தில் செய்யுமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.

Tags : Muthupettai, farmers, siege
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...