மலைக்கிராமங்களில் தொடர்மழையால் குற்றாலமாக மாறிய கல்லாறு மடுவு அருவி: இளைஞர்கள் உற்சாக குளியல்

சேலம்: தமிழகத்தில் அருவி என்றாலே, குற்றாலம் தான் நமக்கு நினைவில் வரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு செல்ல ஆர்வம் கொண்டிருந்தாலும், பெரும்பாலானோருக்கு அந்த ஆசை கைகூடுவதில்லை.தற்போது,சேலத்தில் உள்ள மக்களின் அத்தகையை ஆசையை நிறைவேற்றும் விதமாக உருவாகியுள்ளது ஒரு மினி குற்றாலம். மலைகளின் இளவரசியான ஏற்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. அங்கு பெய்யும் மழைநீர் பல்வேறு வழித்தடங்களில் அடிவாரத்திற்கு வந்து,நீர்நிலைகளில் கலக்கிறது. அதில் ஒரு வழித்தடமான கல்லாற்றில் தான் இந்த குற்றாலம் உருவாகியுள்ளது.ஏற்காட்டின்  முக்கிய சுற்றுலா பார்வையிடங்களில் ஒன்றான பகோடா பாயிண்ட் மற்றும் போட்டுக்காட்டிலிருந்து வரும் மழைநீர், கல்லாறு ஓடை வழியாக வந்து, வலசையூர் ஏரிக்கு செல்கிறது.

பகோடா பாயிண்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில், 35 அடி உயர பாறையிலிருந்து அருவி போல கொட்டும் இந்த மழைநீர்,பார்த்த உடனே குற்றாலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அருவிக்கு முன்னதாக,பாறை இடுக்குகளில் மழைநீர் தவழ்ந்து வரும் அந்த நிகழ்வு,  மிகவும் ரம்மியமாக  காட்சியளித்து,மனதிற்கு இதமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. சேலம் மாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இந்த அருவி உருவாகியிருப்பது, சேலத்து மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகை கொண்டுள்ளது. சேலத்திலிருந்து பொன்னமாப்பேட்டை கேட்,வீராணம் வழியாக பள்ளிப்பட்டியிலிருந்து பிரிந்து  டி.பெருமாபாளையத்திற்கு செல்ல வேண்டும். பின்னர்,அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர், காரைக்காடு வரை டூவீலர்,கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லலாம். அங்கிருந்து, மலைப்பாதையில் நடைபயணமாக,சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்றால்,எழில்கொஞ்சும் இந்த மினி குற்றாலத்தை அடைந்துவிடலாம்.

ஒத்தையடி பாதையில், மலைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அரை மணிநேரத்திலும், மற்றவர்கள் கூடுதல் நேரத்திலும் சென்றடைய முடியும். அப்பகுதியினர் இதனை கல்லாறு அருவி என குறிப்பிட்டாலும், ஒரு சிலர்  மாமரத்து மடுவு எனவும் அழைக்கின்றனர். நாள்தோறும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கும்பலாக வந்து, புகைப்படம் எடுத்தும்,உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து அருவிக்கு வந்திருந்த கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ‘‘நண்பர்கள் மூலம் அருவி பற்றிய விவரம் அறிந்து வந்து பார்த்தோம். மலைப்பாதையில் நடந்து வந்தது சிரமமாக இருந்தாலும், அருவியை கண்டதும் அனைத்தும் மறந்து போனது.பெண்கள்,குழந்தைகள் அருவிக்கு வருவது சற்று சிரமமானது. ஆனால், இளைஞர்கள் ஒன்றாக வந்து உற்சாகமாக பொழுதை கழிக்க நல்ல இடமாக அமைந்துள்ளது,’’ என்றனர். வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம்,பாதை வசதி செய்து கொடுத்து சுற்றுலா தலமாக உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: