×

சிறுகாட்டூர் வடவாற்று பாலம் துண்டிப்பு: 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே சிறுகாட்டூர் பகுதியில் உள்ள வடவாற்றின் பாலம் நீர்வரத்து காரணமாக அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. எய்யலூர், ஆச்சாள்புரம், குச்சிப்பாளையம், சிறுகாட்டூர் உள்பட 5க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் இந்த பாலம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. மேலும் அப்பகுதி பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்காக தங்களின் இரண்டு சக்கர வாகனத்தின் மூலம் சென்றுவர வசதியாக இருந்தது. தற்போது வடவாற்றில் 1000 கனஅடிகளுக்கு மேல் நீர்வரத்து இருப்பதால் இந்த பாலத்தின் முன்பக்க கான்கிரீட் இணைப்பு அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டுள்ளது.

மண் அரிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாலத்தில் இரண்டு சக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 3 வருடங்களாக எங்கள் பகுதியில் பேருந்து வசதி இல்லாத காரணங்களால் அத்தியாவசிய தேவைகளுக்காக பக்கத்தில் உள்ள அரியலூர் மாவட்ட எல்லை பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த வடவாற்று பாலத்தைதான் பயன்படுத்தி வந்தோம். தரமில்லாமல் கட்டப்பட்ட பாலம், 7 ஆண்டுக்குள் சேதமடைந்துவிட்டது.

இதனால் அத்தியாவசிய தேவைக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈச்சம்பூண்டிவரை பழுதடைந்த சாலையில் பயணித்து அங்குள்ள பாலம் வழியாக சென்று வருகிறோம். இதனால் சுமார் 7 கிலோ மீட்டர்வரை சுற்று பாதையில் செல்ல வேண்டியுள்ளது. இது எங்களுக்கு அதிகப்படியாகன நேர விரயத்தை ஏற்படுத்துகிறது. பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Kurukattur, Vadakkavadu Bridge, Disconnection
× RELATED கொக்கிரகுளத்தில் பாலம் அமைக்க...