×

ஓசூர் அருகே சுற்றித்திரிந்த ஒற்றை யானை 3-வது நாளில் பிடிபட்டது: பிடிபட்ட குரோபரை முதுமலை கொண்டு செல்ல திட்டம்?

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சுற்றித்திரிந்த குரோபர் எனும் ஒற்றை யானை 3-வது நாளில் பிடிபட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 2 யானைகள் முகாமிட்டு, அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிய போதும், மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு வந்து விட்டன. தற்போது கதிரேப்பள்ளியில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. பயிர்களை நாசம் செய்து, அட்டகாசம் செய்து வரும் இந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக, நேற்று முன்தினம் காலை, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி தலைமையில் வனத்துறையினரும், முதுமலையில் இருந்து வனவிலங்குகள் சிறப்பு மருத்துவரான மனோகரன் தலைமையிலான குழுவினரும் வரவழைக்கப்பட்டு,  100க்கும் மேற்பட்டோர் 2 கும்கி யானைகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அடர்ந்த காட்டிற்குள் பள்ளத்தாக்கு பகுதியில், 2 யானைகளும் முகாமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 11.30 மணியளவில் நவீன துப்பாக்கி உதவியுடன் மயக்க ஊசியை செலுத்த முயன்றனர். ஆனால், அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகளுக்கு அருகில் செல்ல முடியாமல், மயக்க ஊசி செலுத்தும் முயற்சி 7 முறையும் தோல்வியில் முடிந்தது. மாலையானதால் வனத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். தொடர்ந்து, நேற்று 2வது நாளாக அதிகாலை முதல் யானைகளை தேடினர். யானைகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள ஹெலிகேம்கள் பயன்படுத்தப்பட்டது. மதியத்திற்கு மேல் 2 யானைகளும், அடர்ந்த புதர்பகுதியில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், யானைகள் புதரிலிருந்து வெளியே வராததால், மயக்க ஊசி செலுத்த முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது அப்போது குரோபர் என்ற ஒற்றை யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 2 காட்டு யானைகளில் ஒற்றை யானையை பிடித்து மற்றொரு யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இந்த குரோபர் ஒற்றை யானையை வனத்திற்குள் விரட்டிய பிறகே விரட்டியடிக்கப்பட்ட மற்றோரு யானையை கண்காணிக்க உள்ளதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிடிப்பட்ட குரோபர் என்ற ஒற்றை யானையை லாரியில் ஏற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பிடிப்பட்ட குரோபரை முதுமலை கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Single elephant, caught, Hosur
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...